×

பெருங்களத்தூர் அருகே கன மழையின்போது மாயமான முதலை சிக்கியது: வனத்துறையினர் பிடித்து சென்றனர்

தாம்பரம், டிச.14: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதிகளில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளை சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில், ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் பல ஆண்டுகளாக முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் இரவு நேரங்களில் நீர்நிலைகளில் இருந்து வெளியே வந்து குடியிருப்புகளில் உள்ள கோழி, வாத்து, நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவது வழக்கமாக உள்ளது. இந்த முதலைகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிய பின்பே முதலைகளை பிடிக்க முடியும் எனக்கூறி வருவதால் தொடர்ந்து முதலைகளை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையின்போது நெடுங்குன்றம், காந்தி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சுமார் 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று நெடுங்குன்றம் ஏரியிலிருந்து வெளியேறி சாலையைக் கடந்து சென்றது. இதனை, அவ்வழியாக காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். இது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனைதொடர்ந்து அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இருந்து வந்தனர்.

இந்நிலையில், ஆலப்பாக்கம், வேப்பந்தங்கல் ஏரி அருகே எஸ்எஸ்எம் நகர் செல்லும் சாலையில் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தின் சுற்றுச்சுவர் ஓரத்தில் நேற்று மதியம் சுமார் 8 அடி நீளமுள்ள முதலை ஒன்று இருப்பதைக்கண்ட பொதுமக்கள் பீதிடைந்தனர். இதுகுறித்து, தாம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின்பேரில், தாம்பரம் வனத்துறையினர் மற்றும் கிண்டி வன உயிரின சரகத்தினர் என 13க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சென்று, சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி அங்கிருந்த 8அடி முதலையை பத்திரமாக மீட்டு கிண்டி சிறுவர் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆலப்பாக்கம், சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன்அருகே வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு இந்த பூங்காவில் இருந்த முதலை குட்டிகளை பறவைகள் அங்கிருந்து எடுத்து வந்து இந்த பகுதிகளில் உள்ள ஏரிகளில் போட்டு விட்டன. பின்னர் அந்த முதலை குட்டிகள் பெரிதாகி இந்த ஏரிகள் மற்றும் குளங்களில் வாழ்ந்து வருகின்றது. இந்த ஏரிகள் மற்றும் குளங்களில் தற்போது ஏராளமான முதலைகள் உள்ளது. ஒவ்வொன்றும் சுமார் 7 முதல் 9 அடிக்கு மேல் இருக்கும். இவை குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுப்பதுடன், வீடுகளில் உள்ள கால்நடைகளை குறிவைத்து தாக்குகின்றன.

இதனை பிடிப்பதற்கு வனத்துறையினரிடம் புகார் அளித்தால் ஏரியில் தண்ணீர் அதிகம் உள்ளது, ஏரியில் தண்ணீர் வற்றிய பின்னர் முதலைகளை பிடிக்கிறோம் என ஒவ்வொரு முறையும் கூறுகிறார்களே தவிர ஏரியில் தண்ணீர் வற்றிய பின்னர் அவர்கள் இதுகுறித்து கண்டு கொள்ளாமலேயே இருந்து வருகின்றனர். ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட முதலைகள் இருந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஏராளமான முதலை குட்டிகள் இந்த ஏரிகள் மற்றும் குளங்களில் பெருகி வருகிறது. தற்போது, பிடிபட்டுள்ள முதலை கடந்த 3ம்தேதி இரவு கனமழை பெய்து கொண்டிருந்தபோது நெடுங்குன்றம் காந்தி சாலையில் தனியார் பள்ளி அருகே சாலையை கடந்து சென்ற முதலை என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அங்கு சாலையை கடந்து சென்ற முதலையாக தற்போது பிடிபட்ட முதலை இருக்காது. ஏனென்றால் அந்தப் பகுதியில் இருந்து ஆலப்பாக்கம் – வேப்பந்தங்கல் ஏரி பகுதிக்கு மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ளது. எனவே அங்கிருந்து முதலை அவ்வளவு தூரம் சென்று இருக்க வாய்ப்புகள் இல்லை. சாலையை கடந்து சென்ற முதலை அருகில் உள்ள குளத்தில் இருக்கலாம் அல்லது ஏரிக்கு செல்லும் கால்வாய் வழியாக மீண்டும் நெடுங்குன்றம் ஏரிக்கு சென்று இருக்கலாம். ஏற்கனவே ஆலப்பாக்கம், வேப்பந்தங்கள் ஏரியில் உள்ள முதலைகளில் ஒரு முதலை குடியிருப்பு பகுதியில் புகுந்து அதனை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோல, அடிக்கடி இப்பகுதியில் ஏரிகளில் இருந்து முதலைகள் வெளியேறி சாலை, குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது. மழை காலங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் போதும், வெயில் காலங்களில் முழுமையாக நீர் வற்றிய நிலையிலும் இந்த முதலைகள் அதிகம் வெளிப்படுவதால் அந்த சமயங்களில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, அனைத்து முதலைகளையும் பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

The post பெருங்களத்தூர் அருகே கன மழையின்போது மாயமான முதலை சிக்கியது: வனத்துறையினர் பிடித்து சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Perungalathur ,Tambaram ,Satanandapuram ,Alapakkam ,Nedungunram ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...