×

8 மணி நேர வேலை, ஓய்வூதியம் வழங்கக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 2ம் நாளாக ஸ்டிரைக் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

நாகர்கோவில், டிச.14: கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இரண்டாம் நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை, ஓய்வூதியம் உட்பட அனைத்து பலன்களும் வழங்கிட வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து சாதகமான பரிந்துரைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமிய அஞ்சலகங்கள் மூடப்பட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் 188 கிராமிய அஞ்சலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 280 மகளிர் உட்பட 450 பேர் பணியாற்றுகின்றனர். இரண்டாம் நாளான நேற்றும் 120 மகளிர் உட்பட 204 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக மணியார்டர் பட்டுவாடா, தபால் பட்டுவாடா, இன்சூரன்ஸ் உள்ளிட்ட கிராமிய அஞ்சலக சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தலைவர் ராஜதுரை தலைமை வகித்தார். செயலாளர் தினேஷ், பால்மணி, பொருளாளர் தெய்வ செல்வன், முன்னாள் மாநில தலைவர் இஸ்மாயில், முன்னாள் கோட்ட தலைவர் சுகுமாறன், பெண்கள் பிரிவு நிர்வாகிகள் தேவி சங்கரி, சுலோசனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post 8 மணி நேர வேலை, ஓய்வூதியம் வழங்கக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 2ம் நாளாக ஸ்டிரைக் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...