×

காங். எம்பி வீட்டில் கத்தை கத்தையாக பணம் வீட்டுக்கு அடியில் பணம் பதுக்கலா? ரேடார் உதவியுடன் சோதனை

ராஞ்சி: ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவின் மதுபான நிறுவனங்களில் வருமான வரி சோதனையில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, வீட்டுக்கு அடியில் பணம் பதுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க ரேடார் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. ஜார்க்கண்டை சேர்ந்த காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூ. ஒடிசாவில் இவரது குடும்பத்தினர் நடத்தி வரும் மதுபான நிறுவனங்களில் கடந்த 6ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது.

மூட்டைகளில் இருந்தும், பைகளில் இருந்தும், பீரோக்களில் இருந்தும் கத்தை கத்தையாக பணம் சிக்கின. இந்த சோதனையில் இதுவரை இல்லாத அளவு ரூ.351 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,ராஞ்சியில் உள்ள தீரஜின் வீட்டுக்கு அடியில் பணம் மற்றும் முக்கிய பொருட்களை பதுக்கி வைத்திருக்கலாம் என வருமான வரித்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து நிலப்பகுதியை சோதனையிட ரேடார் கருவியை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் இரவு கொண்டு வந்தனர். ரேடார் உதவியுடன் எம்பி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சந்தேகத்துக்கு இடமாக எந்த பொருளும் சிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காங். எம்பி வீட்டில் கத்தை கத்தையாக பணம் வீட்டுக்கு அடியில் பணம் பதுக்கலா? ரேடார் உதவியுடன் சோதனை appeared first on Dinakaran.

Tags : Kong ,Ranchi ,Jharkhand Congress ,Dheeraj Sahu ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு;...