×

மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் துபாயில் கைது: இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை

துபாய்: சட்டீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்திய மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பால் துபாயில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பர் ரவி உப்பால் ஆகிய இருவரும் துபாயில், மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதனை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இயக்கி வந்தனர். அவர்கள் இந்தியாவில் பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தி ரூ.6000கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. மேலும் சட்டீஸ்கர் மற்றும் மும்பை போலீசாரும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபரில் இருவருக்கும் எதிராக சிறப்பு பணமோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத்துறை கோரிக்கையின் அடிப்படையில் இன்டர்போல் போலீசார் இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் அறிவிப்பு வெளியிட்டனர். இதன் அடிப்படையில் துபாயில் இருந்த ரவி உப்பாலை கடந்த வாரம் உள்ளூர் போலீசார் கைது செய்தனர். அவரை துபாயில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக துபாய் அதிகாரிகளுடன் அவர்கள் தொடர்பில் உள்ளனர். மகாதேவ் சூதாட்ட செயலியின் மற்றொரு உரிமையாளரான சவுரப் சந்திரகரை தேடும் பணியிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் துபாயில் கைது: இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Dubai ,India ,Ravi Uppal ,Chhattisgarh ,
× RELATED சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி...