×

எண்ணெய் கசிவை அகற்றும் வகையில் பணிகளை விரைவுபடுத்த சிபிசிஎல்லுக்கு அரசு உத்தரவு

சென்னை: எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கசிவை விரைந்து அகற்றும் பணிகளை விரைவுபடுத்திட சிபிசிஎல் நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: மாநில எண்ணெய் நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளும், சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எண்ணூர் கிரீக் பகுதியில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளையும், பாதிக்கப்பட்ட கிராமங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்தது. தற்போது, அப்பகுதியில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எண்ணெய் பரவுவதைக் தடுப்பதற்காக பூமர்கள் வைக்கப்பட்டுள்ளன.

கிரீக்கிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காக எண்ணெய் ஸ்கிம்மர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அடுத்த 2 நாட்களில் மேலும் நான்கு எண்ணெய் ஸ்கிம்மர்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த 75 படகுகள் மற்றும் 300 பணியாட்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்பரப்பில் இருந்து எண்ணெயை உறிஞ்சுவதற்கு நான்கு கல்லி சக்கர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜே.சி.பி மற்றும் பிற சாதனங்களைக் கொண்டு அருகிலுள்ள கிராமங்களில் இருந்து எண்ணெய் படிந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் பூமர்கள், ஸ்கிம்மர்கள் மற்றும் பயிற்சி பெற்ற மனிதவளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் அகற்றும் பணிகளை மேலும் விரைவுபடுத்திட சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய நடமாடும் மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு முகாமையும் ஏற்பாடு செய்துள்ளது. வனத்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் கண்காணிப்புக் குழுக்கள் கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹு உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், எண்ணெய் அகற்றும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு தக்க அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

எண்ணெய் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உறுதிப்படுத்துமாறு சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விவரங்களை நிவாரண ஆணையரிடம் வழங்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மீன்வளத்துறை இயக்குநர் ஆகியோருக்கு மேலாண்மை குழு உத்தரவிட்டுள்ளது.

The post எண்ணெய் கசிவை அகற்றும் வகையில் பணிகளை விரைவுபடுத்த சிபிசிஎல்லுக்கு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt ,CBCL ,Chennai ,Tamil Nadu government ,CPCL ,Ennore creek ,Dinakaran ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...