×

நியோமேக்ஸ் மோசடி வழக்கு முழுமையான விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த கவுதமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவன இயக்குநர்கள் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி ரூ.1 கோடியே 5 லட்சம் முதலீடு செய்தோம். ஆனால், எங்களுக்கு வட்டியோ, நிலமோ பதிவு செய்து தரவில்லை. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பல ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளது. இதில் முக்கியமானவர்கள் கைது செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், இயக்குநர்களை கைது செய்து, பணத்தை மீட்டு முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த விவகாரத்தில் போலீசார் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். இதுவரை எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. நிறுவனத்தைச் சேர்ந்தவர்களில் இன்னும் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது? இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நிறுவனத்தின் முக்கிய நபர்கள் யார்? நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் இதுவரை எத்தனைபேர் முதலீடு செய்துள்ளனர். நிறுவனங்களின் சொத்து மற்றும் அதன் மதிப்பு என்ன? இன்னும் கைப்பற்ற வேண்டிய பொருட்கள் உள்ளிட்ட முழுமையான விபரங்களை போலீசார் தரப்பில் முழுமையான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை டிச.18க்கு தள்ளி வைத்தார்.

The post நியோமேக்ஸ் மோசடி வழக்கு முழுமையான விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Neomax ,ICourt ,Madurai ,Gautami ,Kumbakonam, Tanjore district ,Dinakaran ,
× RELATED நியோமேக்ஸ் மோசடி: மேலும் 4 பேர் கைது