×

வருசநாடு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி மூலிகை மருந்தாகும் முருங்கைக் கீரை: வருவாய் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு: வருசநாடு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முருங்கை இலைகள், மூலிகை மருந்து தயாரிக்க வெளி மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. காயும் காசாகும் இந்த சாகுபடிக்கு தேவையான ஆலோசனைகளை தோட்டக்கலைத்துறை வழங்கி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில், வருசநாடு பகுதியில் உள்ள தங்கம்மாள்புரம், முருக்கோடை, உப்புத்துறை, கருப்பையாபுரம், மூலக்கடை, சோலைத்தேவன்பட்டி, பின்னத்தேவன்பட்டி, வாலிப்பாறை, அண்ணா நகர், ராஜேந்திராநகர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் விளையும் முருங்கைக் காய்களை மும்பை, கொல்கொத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பி வருகின்றனர். மேலும், முருங்கைக் கீரைகளையும் மூலிகை மருந்துக்காக அனுப்பி வருகின்றனர். தினசரி 10க்கும் மேற்பட்ட லாரிகளில் முருங்கைக்காய் மற்றும் கீரை அனுப்பப்படுகிறது.

இந்த சாகுபடியில் கூடுதல் வருவாய் பெறுவதற்கு, கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறையினர் ஒவ்வொரு விவசாய நிலத்திற்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் 25 வரை விற்பனையாகி வருகிறது. மூலிகை மருந்தாகும் முருங்கை கீரை கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் முருங்கை சாகுபடியில் கீரை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முருங்கைக் கீரை உடலுக்கு நல்ல உணவாகும். அதிகளவில் எதிர்ப்பு சக்தி தரும். ஒரு கிலோ விலை 80 முதல் 85 ரூபாய் வரை சந்தையில் விற்பனையாகிறது. முருங்கை கீரை மூலிகை மருந்துக்கும் பயன்படுத்துகின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, கம்பம், வருசநாடு ஆகிய பகுதிகளில் இருந்து முருங்கைக் கீரையை மொத்தமாக வாங்கி, பதப்படுத்தி வெளி மாநிலத்திற்கு அனுப்புகின்றனர்.

இது குறித்து முருங்கை விவசாயிகள் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் அதிகளவில் முருங்கை சாகுபடி செய்து வருகிறோம். சாகுபடிக்கு தேவையான ஆலோசனைகளை தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை அதிகாரிகள் வழங்குகின்றனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக ஈட்டுவதற்கும் முருங்கை சாகுபடி உதவுகிறது’ என்றனர். மேலும், அவர்கள் கூறுகையில், ‘சில சமயங்களில் சூறாவளிக் காற்றால் முருங்கை சாகுபடி பாதிக்கப்படுகிறது. இதற்கு மாவட்ட தோட்டக்கலைதுறை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றனர்.

 

The post வருசநாடு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி மூலிகை மருந்தாகும் முருங்கைக் கீரை: வருவாய் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Varasanadu region ,Yarasanadu ,Varasanadu ,Dinakaran ,
× RELATED வருசநாடு அருகே புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தது