×

மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து வீடு புகுந்து நகை, பணம் திருடிய பிரபல கொள்ளைக்காரி கைது

சங்ககிரி: சங்ககிரி அருகே மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து 9 பவுன் நகை மற்றும் ₹30 ஆயிரம் கொள்ளையடித்த பிரபல கொள்ளைக்காரி மைதிலி குறித்து ஓராண்டுக்குப்பின் துப்பு துலங்கியது.சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (87). இவரது மனைவி குப்பம்மாளுடன் வசித்துக் கொண்டு வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் 3ம்தேதி மதியம் 11.45 மணிக்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ராமசாமியின் கடைக்கு வந்து வடுகப்பட்டி மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும். கோயில் பூட்டி உள்ளது, பூசாரியின் போன் எண் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

பின்னர் அந்த பெண் ராமசாமியிடம், ஒரு சிப்பம் அரிசி விலைக்கு வாங்கிக் கொண்டு அதற்கான தொகையை கொடுத்து விட்டு இங்கே சிறிது நேரம் நிற்கிறேன் என கூறியுள்ளார். ராமசாமியும் அதை நம்பி வீட்டிற்கு வெளியே வந்து கோயில் பூசாரியின் போன் நெம்பரை டைரியில் தேடிக் கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டுக்குள் சென்ற அப்பெண் பீரோவை திறந்து 9 பவுன் நகை மற்றும் ₹30 ஆயிரத்தை திருடிக் கொண்டு நைசாக அங்கிருந்து சென்று விட்டார்.சிறிது நேரம் கழித்து சந்தேகம் அடைந்த ராமசாமி வீட்டிற்குள் சென்று பார்த்த போது 9 பவுன் நகை மற்றும் ₹30 ஆயிரம் பணம் திருட்டுப் போனது தெரிய வந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை தேடியபோது சற்று தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டில் தப்பிச் சென்றது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இது குறித்து ராமசாமி, தனது மகன் வெங்கடாசலத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனையடுத்து வெங்கடாசலம் சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்ஐ பழனிச்சாமி ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.விசாரணையில் அப்பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை அருந்ததியர் காலனியைச் சேர்ந்த மைதிலி (40) என்பதும், வேறொரு வழக்கில் கைதாகி வேலூர் பெண்கள் சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் ஒப்புதல் பெற்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் 11ம் தேதி மாலை 5 மணி முதல் 12ம் தேதி மாலை 5 மணி வரை ஒருநாள் நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் காவலில் எடுத்து சங்ககிரி எஸ்ஐ பழனிசாமி, பெண் போலீசார் உதவியுடன் விசாரணை செய்தார். அப்போது மைதிலி போலீசாரிடம் ராமசாமி வீட்டில் நகை, பணம் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், அந்த பணத்தை குடும்பத்துடன் ஜாலியாக செலவு செய்துவிட்டேன். மேலும், 2 பவுன் தங்க செயினை தீவட்டிப்பட்டியில் ஒரு நகை கடையில் விற்று விட்டேன் என கூறியுள்ளார். அதனையடுத்து சங்ககிரி போலீசார் 2 பவுனை மீட்டு, நேற்று மாலை மைதிலியை சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கு கொண்டு சென்றனர்.

The post மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து வீடு புகுந்து நகை, பணம் திருடிய பிரபல கொள்ளைக்காரி கைது appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,
× RELATED என்னுடையது விஸ்வரூப வெற்றி!