×

திருவள்ளூர் மாவட்ட வரம்பில் உள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவு படரவில்லை: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம்

சென்னை: திருவள்ளூர் நீர்நிலைகளில் எண்ணெய் கழிவு படரவில்லை என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரில் கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்ததால், எண்ணூர் முகத்துவார ஆற்று நீர் மற்றும் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம் போன்ற பல பகுதிகள் மற்றும் கடலில் எண்ணெய் படலம் கடந்த ஒரு வாரமாக மிதந்து கொண்டிருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கடலோரப் பகுதியில் வசிக்கும மக்களுக்கு தோல் பிரச்னை, சுவாச கோளாறு, கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளன.

சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை ஒரு குழு அமைத்தது. இதனிடையே, தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறிய எண்ணெய் எண்ணூரில் கடற்பரப்பில் கலந்த விவரகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் காணொலி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் அதற்கு தலைமை செயலாலர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் எண்ணெய் படலம் குறித்து கடந்த 7ம் தேதி ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கழிவுகளை அகற்றும் பணி கடந்த 11ம் தேதி தொடங்கப்பட்டது. எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க (Boomer) தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை, திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை. திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்ட வரம்பில் உள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவு படரவில்லை: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Chief Secretary ,Sivtas Meena ,Chennai ,Shivdas Meena ,Thiruvallur ,Thiruvallur District Range ,
× RELATED திருத்தணி அருகே டாஸ்மாக் கடை பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனை