×

ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகங்களில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

*18ம் தேதி வரை நடக்கிறது

பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகங்களில் நேற்று முதல் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்கியது. வரும் 18ம் தேதி வரை நடைபெறுவதாக வனத்தறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி (டாப்சிலிப்) உள்ளிட்ட 4 வன சரகங்கள் உள்ளன. இதில் புலி, யானை, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகு பூனை, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, சிங்கவால் குரங்கு, குரங்கு, வரையாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

ஆண்டுதோறும் கோடை மற்றும் குளிர் காலத்தில் நேரடியாக புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் குளிர்கால கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளது. இப்பணியில் வனக்காப்பாளர், வேட்டைத்தடுப்பு காவலர் கொண்ட குழுவினர் தனித்தனியாக வனப்பகுதிகளுக்குள் அதிகாலையிலேயே சென்று ஈடுபட்டனர். வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள், திசைகாட்டும் கருவி, நிலைமானி, தூரம் அளக்கும் கருவி, கயிறு, வரைபடம் உள்ளிட்டவைகள் வைத்திருந்தனர்.

உலாந்தியில் (டாப்சிலிப்) வனச்சரகர் சக்திவேல் தலைமையில் தனித்தனி குழுக்களாக சென்று, அடர்ந்த காட்டுப்பகுதியில் வனவிலங்கு கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அதுபோல் பொள்ளாச்சி வனச்சரகத்தில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் ஆழியார், சேத்துமடை, தம்பம்பதி, போத்தமடை, ஆயிரங்கால்குண்று ஆழியார் அருகே உள்ள வனப்பகுதியிலும் கணக்கெடுக்கப்பட்டது. மேலும் அடர்ந்த வனத்திற்குள் உள்ள நீர்நிலைகளில் வனவிலங்குகளின் கால்தடம், உதிர்ந்த நகம் மற்றும் முடி உள்ளிட்டவை உள்ளனவா? என்று கண்காணித்தனர்.

மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள கல்லார் பிரிவு மற்றும் மானாம்பள்ளி பிரிவுக்குட்பட்ட 8 இடங்களில் 16 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு, கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. வனச்சரகர் மணிகண்டன் நேற்று காலை கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

வனத்துறை ஊழியர்கள் வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில், ‘‘குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் வன ஊழியர்கள் குழுக்களாக பிரித்து வனத்திற்குள் சென்றுள்ளனர். வனவிலங்கு கணக்கெடுப்பின்போது, புலிகள் மட்டுமின்றி கண்ணில் தென்படும் பிற விலங்குகளும் கணக்கெடுக்கப்படும். மாமிச உண்ணி, தாவர உண்ணி என்று தனித்தனியாக கணக்கெடுக்கப்படுகிறது.

கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதில் டாப்சிலிப் வனத்தில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டமும் இருப்பது தெரியவந்துள்ளது. விலங்குகளின் கால் தடத்தை வனத்துறையினர் அளவீடு செய்து பதிவு செய்து கொண்டனர். வெகுதூரத்தில் கண்ணில் புலி, சிறுத்தைகள் தென்பட்டாலோ கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

டாப்சிலிப், கவியருவிக்கு பயணிகளுக்கு அனுமதி

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பின்போது, சுற்றுலா பகுதிகளான டாப்சிலிப், கவியருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்கு கணக்கெடுப்பின்போது, சுற்றுலா பகுதிக்கு பயணிகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டனர். தற்போது நடக்கும் வனவிலங்கு கணக்கெடுப்பின்போது டாப்சிலிப் மற்றும் கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் வந்து செல்லலாம். அவர்களுக்கு எந்தவித தடையில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகங்களில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Winter Wildlife Survey ,Anaimalai Tiger Reserve Forests ,18th Pollachi ,Dinakaran ,
× RELATED ஆனைமலை புலிகள் காப்பகத்தில்...