×

கடலூரில் மும்முரமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் குடில் தயாரிக்கும் பணி: 18 பொம்மைகள் கொண்ட செட் ரூ.150 முதல் ரூ.12,000 வரை நிர்ணயம்

கடலூர்: கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் இயேசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் குடில் பொம்மைகள் தயாரிக்கும் பணி கடலூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இயேசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படுவது வழக்கம்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்பாக அமைக்கப்படும் இந்த குடிலில் குழந்தை இயேசு, மரியாள், யோசேப், இடையர்கள், தேவதூதர்கள், 3 அரசர்கள் ஆகியோர் சித்தரிக்கப்படுவார்கள். இவர்களோடு விண்மீன், ஒட்டகம், கழுதை முதலிய பொம்மைகளும் இடம்பெற்று இருக்கும். இந்த பொம்மைகளை தயார் செய்யும் பணி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்படும் இந்த பொம்மைகளை செய்ய 4 நாட்கள் வரை ஆகும் என்றும் 3 இன்ச் முதல் ஒரு அடி உயரம் வரை பொம்மைகள் செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர்.

18 பொம்மைகள் கொண்ட ஒரு செட் ரூ.150 முதல் ரூ.12,000 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறும் உற்பத்தியாளர்கள் பெங்களூரு, மும்பை, கோவா உள்ளிட்ட நகரங்களுக்கும் பொம்மைகள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். பெத்லகேமில் இயேசு கிறிஸ்து மாட்டு தொழுவத்தில் பிறந்த காட்சியை கண் முன்னே கொண்டுவருவதாக அழகிய வேலைப்பாடுகளுடன் உற்பத்தி செய்யப்படும் பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post கடலூரில் மும்முரமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் குடில் தயாரிக்கும் பணி: 18 பொம்மைகள் கொண்ட செட் ரூ.150 முதல் ரூ.12,000 வரை நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Christmas ,Cuddalore ,Jesus Christ ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை