×

சுடுகாட்டை ஆக்கிரமித்து நெல் சாகுபடி இருளர் சமூகத்தை சேர்ந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்

*வருவாய், காவல்துறையினர் பேச்சுவார்த்தை *விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே இருளர் இன மக்களின் தற்காலிக சுடுகாட்டை ஆக்கிரமித்து நெல் சாகுபடி செய்ததால் நேற்று இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து வருவாய், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நெற்பயிர்களை அகற்றி சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

விழுப்புரம் அருகே வளவனூர் குமாரகுப்பத்தில் இருளர் குடியிருப்பில் சுமார் 10 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இதனிடையே இருளர் இன மக்கள் இறந்தால் அவர்களது சடலத்தை அடக்கம் செய்ய அப்பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓடை வாய்க்காலை தற்காலிக சுடுகாடாக பயன்படுத்தி அடக்கம் செய்து வந்துள்ளனர். நாளடைவில் ஊர் தரப்பை சேர்ந்த சிலர் இருளர் இன மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்து வந்துள்ளனர். தற்போது நெல் பயிர்கள் சாகுபடி செய்துள்ளார்களாம்.

இந்நிலையில் நேற்று இருளர் குடியிருப்பில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த நிலையில் சுடுகாடு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், தற்போது நெல் சாகுபடி செய்ததால் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து வருவாய்த்துறை, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர். இதனிடையே இந்த இடம் நீர்வழிப்பாதை, யாருக்கும் சொந்தம் கிடையாது. தற்போது இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறி ஆக்கிரமிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இருளர் இன சமூகத்தை சேர்ந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் சடலத்தை கொண்டு செல்லவும், அவரது உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் நெற்பயிர்களை அகற்றிய அதிகாரிகள் இருளர் சமூகத்தை சேர்ந்தவரின் உடலை எந்தவித பிரச்னையின்றி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் ஓடை ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றப்பட்டு ெபாதுப்பணித்துறைக்கு ஒப்படைக்கப்படும் என்றும், இருளர் இன மக்களுக்கு சுடுகாடு இடத்துக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படுமென்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சுடுகாட்டை ஆக்கிரமித்து நெல் சாகுபடி இருளர் சமூகத்தை சேர்ந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Irular ,Villupuram ,Ilurar ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...