×

தந்தையின் தற்கொலைக்கு காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

*திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் பெண் மனு

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த விவசாயி காளியப்பன்- மனைவி லட்சுமி தம்பதியரின் மகள் இந்துமதி. பி.ஏ. பட்டதாரி. இவர் நேற்று தனது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோருடன் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் அருகேயுள்ள செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த குமரவேல் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பதாக கூறி என்னை (இந்துமதி) பெண் கேட்டு வந்தனர்.

இதையடுத்து எனக்கும், குமரவேலுக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எனது பெற்றோர் திருமணத்தின் போது 23 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக கொடுத்தனர். திருமணத்திற்கு பின்பு குமரவேல் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனிடையே தலை தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு நகை போடவில்லை என கூறி கணவர் குமரவேல் குடும்பத்தினர் எனக்கு சரியாக உணவு அளிக்காமலும், கணவனுடன் சேர விடாமலும் துன்புறுத்தி கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர்,எனது தந்தை காளியப்பன், தாயார் லட்சுமி ஆகியோர் என்னை பார்க்க வந்த போது அவர்களை வீட்டிற்குள் விடாமல் தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டனர். இதில் மனமுடைந்த எனது தந்தை காளியப்பன் சில நாட்களுக்கு முன்பு தென்னை மரத்து பூச்சி மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

தனது தந்தையின் இறப்புக்கு காரணமான தனது கணவர் குமரவேல் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதற்கிடையே புகார் மனு அளிக்க வந்த போது இந்துமதியின் தாயார் லட்சுமி திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post தந்தையின் தற்கொலைக்கு காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Dindigul Collector Office ,Dindigul ,Kaliappan ,Perumalkovilpatti ,Vedasandur ,Lakshmi ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...