×

கடைசி சோமவார விரதம் மெயினருவியில் பெண்கள் புனித நீராடி வழிபாடு

*விநாயகரை 11 முறை சுற்றி வலம் வந்து தரிசனம்

தென்காசி : குற்றாலத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அருவியில் புனித நீராடி அரசமரத்துடன் கூடிய விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே அன்றைய நாள் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. அவற்றுள் ஒன்று கார்த்திகை சோமவார விரதம்.

இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம். சோமன் என்றால் பார்வதியோடு சேர்ந்திருக்கும் சிவபெருமான் என்று அர்த்தம். இந்த விரதத்தை முதன் முதலில் சந்திரன் அனுஷ்டித்ததாகவும், அதன் காரணமாகவே இதற்கு சோமவார விரதம் என்று பெயர் வந்ததாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்கலாம். இதைத்தவிர சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் முதல் திங்கட்கிழமையில் தொடங்கலாம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் கார்த்திகை முதல் திங்கள்கிழமை தொடங்கி கடைசி திங்கள் அன்று இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஆண், பெண்கள் இருவரும் கடைப்பிடிக்கலாம்.

இந்த விரதம் மேற்கொள்ளும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவர். உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் பெறும். தாயாருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளும் நீங்கும். கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும் என்பது ஐதீகமாகும். குறிப்பாக புனித தலங்களில் இந்த வழிபாடு மேற்கொள்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதற்காக குற்றாலத்தில் கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் பெண்கள் அருவிகளில் புனிதநீராடி சிறப்பு வழிபாடு மேற்ெகாண்டனர்.

இந்த ஆண்டு நேற்று கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் குற்றாலம் மெயினருவியில் புனித நீராடி குற்றாலநாதசுவாமி கோயில் அருகில் உள்ள அரசமரத்துடன் கூடிய செண்பக விநாயகர் கோயிலில் 11 முறை சுற்றி வலம் வந்து பின்னர் பிரகாரத்தில் உள்ள நாக தேவதைகளுக்கு பால், பழம், மஞ்சள் பொடி வைத்து கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகளை செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குற்றாலம் போலீசார் செய்திருந்தனர்.

The post கடைசி சோமவார விரதம் மெயினருவியில் பெண்கள் புனித நீராடி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Mainaruvi ,Vinayagar ,Karthikai ,Courtalam ,
× RELATED குளிக்க தடைவிதிப்பு