நெல்லை: அமெரிக்காவில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட 12-ம் வகுப்பு மாணவன் சகாய ஜெபாஸுக்கு தமிழ்நாட்டில் அரசு மரியாதை செலுத்தப்பட உள்ளது. நெல்லையைச் சேர்ந்த சகாய தாமஸ் ரூபன் – வின்சி தம்பதி குவைத் நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். சகாய தாமஸ் ரூபன் – வின்சி தம்பதிக்கு சகாய ஜெபாஸ் என்ற மகன் உள்ளார். சகாய ஜெபாஸ், அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளார். அமெரிக்காவுக்கு கல்வி சுற்றுலா சென்ற மாணவன் சகாய ஜெபாஸ் நவம்பர் 23ம் தேதி குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கியுள்ளார்.
பின்னர் அவரை மீட்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீரில் மூழ்கிய மாணவனுக்கு தேவையான சிகிச்சை கிடைக்க அவரது பெற்றோர் கோரிக்கை வைத்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் உதவி கரம் நீட்டினர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 4-ம் தேதி சகாய ஜெபாஸ் மூளை சாவு அடைந்தார்.
பின்னர் மூளை சாவு அடைந்த மாணவனின் உடல் பெற்றோர் அனுமதியுடன் உறுப்பு தானம் அளிக்கப்பட்டது. மாணவன் உடல் உறுப்பை தானம் செய்த பெற்றோரின் செயலை பாராட்டி பத்திரமும், பதக்கமும் அமெரிக்காவில் வழங்கப்பட்டது. உடல் உறுப்பை தானம் செய்யப்பட்ட மாணவனின் உடல் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும் மாணவன் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.
The post அமெரிக்காவில் மூளை சாவு அடைந்த 12-ம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புகள் தானம் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் appeared first on Dinakaran.