×

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் தாளம் போட்டு இடையூறு ஆந்திர ஐயப்ப பக்தர்கள்-பாதுகாவலர்கள் மோதல்: 3 பேர் கைது

திருச்சி: ரங்கம் கோயிலில் நேற்று ஆந்திர பக்தர்கள்- காவலர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் கோயில் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர பக்தர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நேற்று காலை 6.45 மணிக்கு ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்னாராவ், சந்தாராவ் சந்தா மற்றும் கட்டா ராமு உள்பட 30க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் கோயில் மூலஸ்தானம் அருகில் உள்ள காயத்ரி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை வேகமாக தட்டியுள்ளனர். அங்கிருந்த கோயில் ஊழியர் விக்னேஷ் என்பவர் உண்டியலை தட்டாதீர்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து, சென்னாராவ் மற்றும் சிலர் சேர்ந்து விக்னேஷ் தலைமுடியை பிடித்து உண்டியலில் மோதியுள்ளார். தொடர்ந்து, கோயில் ஊழியர்கள் பரத், செல்வா, விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சென்னாராவை தாக்கியதில் மூக்கு உடைந்து ரத்த வழிந்தது. பதிலுக்கு ஐயப்ப பக்தர்கள் கோயில் ஊழியர்களை தாக்கியதில் கோயில் ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆந்திர ஐயப்ப பக்தர்கள் காயத்ரி மண்டபத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து ரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஐயப்ப பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டது. மோதல் தொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஆந்திர பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கோயில் ஊழியர்களான பரத், விக்னேஷ், செல்வா ஆகிய 3 பேர் கைது செய்தனர். இதுகுறித்து ரங்கம் கோயில் நிர்வாகம் கூறுகையில், ‘‘ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். சபரிமலை சீசன் என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே வரிசையில் நின்ற பக்தர்கள் மிகவும் மெதுவாக தரிசனம் செய்ய வேண்டிய சூழல் நிலவியது. ஆனாலும் பொறுமையை கடைப்பிடிக்காத இவர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கம் எழுப்பியதோடு அங்கிருந்த உண்டியலில் தாளம் போட்டு சக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை எச்சரித்ததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் கோவில் காவலர்களை தாக்கத் தொடங்கினர். இதில் கோவில் காவலர்கள் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது’’ என்றனர்.

The post ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் தாளம் போட்டு இடையூறு ஆந்திர ஐயப்ப பக்தர்கள்-பாதுகாவலர்கள் மோதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Ayyappa ,Srirangam ,Trichy ,Rangam ,Srirangam temple ,
× RELATED ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டி சென்ற பெண் போலீசுக்கு அபராதம்