×

3 குற்றவியல் மசோதா புதிய வரைவு தாக்கல்: கள்ளநோட்டு அச்சிடுவது இனி தீவிரவாத குற்றமாகும்

 

 

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள 3 குற்றவியல் மசோதாக்கள் மீது நாடாளுமன்ற குழு சில திருத்தங்களை பரிந்துரைத்திருந்தது. அந்த திருத்தங்கள் சேர்க்கப்பட்டு புதிய வரைவு சட்ட மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்களை அவர் திரும்பப் பெற்றார். புதிய வரைவு மசோதாவில், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்படும் பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் தீவிரவாதம் என்பதற்கான வரைவில் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு என்கிற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி,

* இந்திய ரூபாய் மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும்படி கள்ள நோட்டுக்களை அச்சிட்டாலும் அது தீவிரவாத குற்றமாக கருதப்படும்.

* கள்ளநோட்டு கடத்தல் மற்றும் புழக்கத்தில் விடுதலும் தீவிரவாத செயலாக கருதப்படும்.

* மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகள் மற்றும் விநியோகங்களை தடுப்பதும் தீவிரவாதமாகும்.

* இந்திய ராணுவம், இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு சொந்தமான உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவித்தாலும் தீவிரவாத குற்றமாகும்.

இவ்வாறு மொத்தம் 5 விதமான திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய வரைவு மசோதாக்கள் மீதான விவாதம் வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்றும் வெள்ளிக்கிழமை ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்றும் அமித்ஷா கூறினார். இதே போல மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிக்கும் 2 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

The post 3 குற்றவியல் மசோதா புதிய வரைவு தாக்கல்: கள்ளநோட்டு அச்சிடுவது இனி தீவிரவாத குற்றமாகும் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...