×

எண்ணூரில் எண்ணெய் கசிவு பாதிப்புக்கு சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை: எண்ணூர் சிற்றோடை பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய சிபிசிஎல் மற்றும் பிற தொழில் நிறுவனங்களில், ஒரு குழு நேற்று முன்தினம் ஆய்வு செய்தது, இதன் அறிக்கையில் சிபிசிஎல் நிறுவன வளாகத்தில் முறையாக மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக அந்நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக எண்ணூர் சிற்றோடைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிபிசிஎல் நிறுவனம் பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் சிற்றோடைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் எண்ணெய் படிவுகள், எண்ணெய் படலங்கள் தேங்கி நிற்கும் இடங்களை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிறுவனத்தின் இரண்டாம் நிலை அலகுகளில் அனைத்து குழாய்கள் மற்றும் தொட்டிகள் கசிவு இல்லாமல் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி வெளியேற்றினால், மாசு கட்டுப்பாடு சட்டம் 1974ன் கீழ் தொழிற்சாலையின் செயல்பாடுகள் முடக்கப்படும். சுற்றுச்சூழல் சேதங்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதோடு, எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட, வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும். தொழில்நுட்ப நிறுவன உதவியுடன் கசிவு கண்டறிதல் மற்றும் பழுதுபார்ப்பு ஆய்வை மேற்கொண்டு உடனடியாக வாரியத்திடம் சிபிசிஎல் நிறுவனம் அளிக்க வேண்டும். ஒரு சிறந்த தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, எண்ணெய் பரவும் பகுதிகளைக் கண்டறிந்து, உடனடியாக செயல் திட்டத்துடன் அறிக்கையை வாரியத்திடம் வழங்க வேண்டும்.

The post எண்ணூரில் எண்ணெய் கசிவு பாதிப்புக்கு சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBCL ,Ennore ,Pollution Control Board ,Chennai ,Tamil Nadu Pollution Control Board ,Ennoor ,CPCL ,Dinakaran ,
× RELATED நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப்...