×

மாநிலங்களவையில் எதிர்ப்புக்கு மத்தியில் தேர்தல் ஆணையர் நியமன மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் நியமனம் மற்றும் சேவை விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் ஆணையர்களை ஜனாதிபதி நியமித்து வந்தார். இந்த நடைமுறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அளித்த தீர்ப்பில், ‘பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை ஜனாதிபதி நியமனம் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த நடைமுறை தொடரும்’ என உத்தரவிட்டது.

இந்நிலையில், 1991ம் ஆண்டு சட்டத்திற்கு பதிலாகதலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள இந்த மசோதாவை ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நேற்று மாநிலங்களவையில் மீண்டும் கொண்டு வந்தார். இந்த மசோதாவின்படி, ஒன்றிய சட்ட அமைச்சர் தலைமையில் தேடல் கமிட்டி அமைக்கப்பட்டு, அரசு செயலாளர் பதவிக்கு குறையாத 5 அதிகாரிகள் கொண்ட தேர்வுக்குழு பெயர்களை பரிந்துரை செய்து நியமனங்கள் நடைபெறும். மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் சம்பளம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையானதாக இருக்கும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் மூத்த எம்பி ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘இது தேர்தல் ஆணையத்தை முற்றிலுமாக ஒன்றிய அரசுக்கு அடிபணியச் செய்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடியோடு நீக்குகிறது. நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான ஒரே அதிகாரம் பெற்ற அமைப்பு தேர்தல் ஆணையம். எனவே அது சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆனால் சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை ஒன்றிய அரசு விரும்பவில்லை. அதன் மீது அரசு அச்சம் கொள்கிறது. அதனால்தான் தனது உத்தரவுக்கு கட்டுப்பட்டதாக இருக்க இத்தகைய சட்டத்தை கொண்டு வருகிறது. ஆங்கிலத்தில் ‘இசி’ என்ற வார்த்தை ‘நம்பகமான தேர்தல்’ என பொருள்படும்படி இருந்ததை, துரதிஷ்டவசமாக ‘தேர்தல் சமரசம்’ என மாற்ற நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்’’ என்றார்.
இதன்பின் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

* உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தாது: ஜெகதீப் தன்கர்

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சுர்ஜிவாலா பேசிய போது, மார்ச் மாத உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சில குறிப்புகளை வாசிக்க முயன்றார். அப்போது அவரை தடுத்த அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், ‘‘நீங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் சட்டத்தை இயற்றும் உச்சபட்ச அதிகாரம் பெற்றது இந்த அவைதான். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கருத்துக்கள் நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தாது. சட்டம் இயற்றுவதில் நீதித்துறையின் தலையீடு இருக்க முடியாது. அதன் ஒருபகுதியாக நீங்கள் இருக்கிறீர்கள்’’ என கூறினார்.

The post மாநிலங்களவையில் எதிர்ப்புக்கு மத்தியில் தேர்தல் ஆணையர் நியமன மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,New Delhi ,Chief Election Commissioner ,Dinakaran ,
× RELATED மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் பதவி ஏற்பு