×

ஆக்கிரமிப்பு வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் நடுவீரப்பட்டு ஏரிக்கரை வெடி வைத்து தகர்ப்பு? : 50 ஏக்கர் பயிர்கள் மூழ்கின

சென்னை: சென்னை அருகே நடுவீரப்பட்டு ஏரிக்கரையை ஆக்கிரமிப்பாளர்கள் வெடித்து தகர்த்ததால் சுற்றுப்புற வீடுகள் மற்றும் 50 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். பெரும்புதூர் ஒன்றியம், நடுவீரப்பட்டு ஊராட்சியில் பெரிய ஏரி, நடுத்தாங்கல் ஏரி, சித்தேரி ஆகிய 3 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் தலா ஒரு கலங்கல், மதகு உள்ளன. வடகிழக்கு பருவ மழை மற்றும் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக பெரிய ஏரி, நடுத்தாங்கல் ஏரி, சித்தேரி ஆகிய 3 ஏரிகள் நிரம்பின. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நடுத்தாங்கல் ஏரி மதகு கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால், நாகாத்தம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு ஆகிய பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, அதே பகுதியில் பயிரிடப்பட்ட சுமார் 50 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.
தகவலறிந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ஆர்டிஓ சரவணக் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி, நடுத்தாங்கல் ஏரி ஆகிய ஏரிகளில் சுமார் 250க்கும் அதிகமான ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டியுள்ளனர். இந்நிலையில், ஏரி நிரம்பியதால் தண்ணீர் ஆக்கிரமிப்பு குடியிருப்பு வீடுகளில் புகுந்துள்ளது. இதனால், ஆக்கிரமிப்பாளர்கள் ஏரி மதகை வெடி வைத்து உடைத்துள்ளனர். ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேறி உள்ளது. ஏரியை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்ற வேண்டும் என்று வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுப்பு மட்டும் செய்துள்ளனர். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றாமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் ஏரி மதகை ஆக்கிரமிப்பாளர்கள் வெடி வைத்து உடைத்துள்ளனர். எனவே, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

 

The post ஆக்கிரமிப்பு வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் நடுவீரப்பட்டு ஏரிக்கரை வெடி வைத்து தகர்ப்பு? : 50 ஏக்கர் பயிர்கள் மூழ்கின appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madhuweerapattu lake ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் பெண்ணின் கண்ணில் மணலை கொட்டி பணப்பை கொள்ளை!