×

மாநகராட்சி 37வது வார்டில் மட்டும் 110 லாரி லோடு குப்பை அகற்றம்: அள்ள அள்ள குவியும் அவலம்

பெரம்பூர்: சென்னையில் புயல் காரணமாக, கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து படிப்படியாக தற்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகல் பாராது மழை வெள்ளம் பாதித்த இடங்களில் வரலாறு காணாத வகையில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி வருகின்றனர். கொடுங்கையூர் பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் அப்பகுதியில் குப்பை மலை போல குவிந்துள்ளது. இந்நிலையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டு கிருஷ்ணமூர்த்தி நகர், எம்கேபி நகர், ஆர்ஆர் நகர், தாமோதரன் நகர், கோல்டன் காம்ப்ளக்ஸ், முல்லை நகர் போன்ற இடங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த பகுதியில் கேப்டன் கால்வாய் உள்ளதால் ரெட்டேரி, கொளத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து வெளிவரும் உபரிநீர் கால்வாயில் நுழைந்து மழை வெள்ளத்தால் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது.

இதனால் எம்கேபி நகர், கிருஷ்ணமூர்த்தி நகர் உள்ளிட்ட பல இடங்களில் மழை நின்ற பின்பும் தண்ணீர் வெளியேற 2 நாள் வரை தாமதமானது. தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தப்படுத்தி வருகின்றனர். கடந்த 5 நாட்களாக 37வது வார்டு முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 110 லோடு லாரி குப்பை கழிவுகள் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு கூறுகையில், ‘‘கேப்டன் கால்வாய் பகுதியில் சேர்ந்த குப்பையை அகற்றுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பொருட்களை அப்பகுதி மக்கள் கேப்டன் கால்வாய் ஓரத்தில் கொட்டி விட்டு சென்று விட்டனர். அவற்றை அகற்றுவது மிகவும் சவாலாக இருந்தது. 37வது வார்டில் அள்ள அள்ள குப்பை கழிவுகள் வருகின்றன. மழைநீர் அதிகம் தேங்கிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

 

The post மாநகராட்சி 37வது வார்டில் மட்டும் 110 லாரி லோடு குப்பை அகற்றம்: அள்ள அள்ள குவியும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Chennai ,
× RELATED நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்