×

ஜனாதிபதிக்கு மசோதாக்களை அனுப்பிய ஆளுநர் ரவியின் நடவடிக்கையை சட்ட விரோதம் என அறிவியுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

புதுடெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கால தாமதம் செய்து வருகிறார். இதனால் அரசு திட்டங்கள் அனைத்தும் பாதிக்கிறது. அதனால் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும். இதேப்போன்று மற்றொரு மனுவில், ‘‘தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறார். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார். மாநில அரசின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறார். குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழு போன்றவற்றில் தேவையில்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மூக்கை நுழைத்து அரசின் பரிந்துரைகளை ஏற்காமல் காலதாமதம் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தமிழக ஆளுநரிடம் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், ஒரு அரசின் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் சட்டத்தை முடக்கி வைக்கவோ அல்லது அதனை செயலிழக்க செய்யவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘கடந்த நவம்பர் 18ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பத்து மசோதாக்களை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். அதனை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும். குறிப்பாக நவம்பர் 18ம் தேதி நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

The post ஜனாதிபதிக்கு மசோதாக்களை அனுப்பிய ஆளுநர் ரவியின் நடவடிக்கையை சட்ட விரோதம் என அறிவியுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Tamil ,Nadu ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu government ,Tamil Nadu ,Governor RN Ravi ,Dinakaran ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...