×

யு-19 ஆசிய கோப்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா

துபாய்: யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், நேபாள அணியுடன் நேற்று மோதிய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
ஐசிசி அகடமி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா யு-19 அணி முதலில் பந்துவீசியது. ராஜ் லிம்பானியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நேபாள அணி பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுக்க, அந்த அணி 22.1 ஓவரில் 52 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஹேமத் தாமி 8, அர்ஜுன் குமால், தீபக் போஹரா தலா 7 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இந்தியா யு-19 பந்துவீச்சில் ராஜ் லிம்பானி 9.1 ஓவரில் 3 மெய்டன் உள்பட 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். ஆராத்யா சுக்லா 2, அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 53 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா யு-19 அணி, 7.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன் எடுத்து அபாரமாக வென்றது.
ஆதர்ஷ் சிங் 13 ரன், அர்ஷின் குல்கர்னி 43 ரன்னுடன் (30 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா யு-19 அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.
இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் இந்தியா 4 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தது. நேபாளம், இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் 6 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்தது. இந்த 2 அணிகளும் ஏ பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிய உள்ள நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நாளை மறுதினம் நடைபெறும்.

 

The post யு-19 ஆசிய கோப்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Nepal ,U-19 Asia Cup ,Dubai ,U-19 Asia Cup ODI ,Dinakaran ,
× RELATED மீண்டும் சர்ச்சை கிளப்பும் நேபாளம்;...