×

முதல் முறை எம்எல்ஏவுக்கு அடித்தது ஜாக்பாட்ராஜஸ்தான் புதிய முதல்வர் பஜன்லால் சர்மா: தியாகுமாரி, பிரேம் சந்த் பைரவா துணை முதல்வர்கள்

ஜெய்ப்பூர்; ஒன்பது நாள் இழுபறிக்கு பிறகு ராஜஸ்தான் புதிய முதல்வராக முதல்முறை எம்எல்ஏவாக ேதர்வு செய்யப்பட்ட பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் டிச.3ம் தேதி வெளியானது. இதில் சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் பா.ஜவும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், டிச.4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தது. தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டியும், மிசோரம் மாநிலத்தில் லால்துஹோமாவும் முதல்வராக பதவி ஏற்றனர். ஆனால் பா.ஜ வெற்றி பெற்ற 3 மாநிலங்களில் புதிய முதல்வர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது. ஒருவார தாமதத்திற்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை நடந்த பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டீஸ்கர் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் சாய் தேர்வு செய்யப்பட்டார். அங்கு முன்னாள் முதல்வர் ராமன்சிங்கிற்கு பா.ஜ வாய்ப்பு வழங்கவில்லை. இதே போல் நேற்று முன்தினம் நடந்த மத்தியபிரதேச மாநில பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சிவராஜ்சிங் சவுகானுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அவரது அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இடம் பெற்று இருந்த, உஜ்ஜைனி தெற்கு தொகுதி எம்எல்ஏவான மோகன்யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று பெரும் குழப்பத்திற்கு மத்தியில் ராஜஸ்தான் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. மேலிட பார்வையாளர்களாக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங், வினோத் தாவ்டே, சரோக் பாண்டே மற்றும் ராஜஸ்தான் மாநில பாஜ பொறுப்பாளரான ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் ஜெய்ப்பூர் வந்தனர். அவர்களை பா.ஜ மாநில தலைவர் சிபி ஜோஷி, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் வரவேற்றனர். அதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை முதல்வர் பதவி கனவில் இருந்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வெளியிட்டார். எம்பி பதவியில் இருந்து விலகிய அரச குடும்பத்தை சேர்ந்த தியாகுமாரி, பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணைமுதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டனர். வாசுதேவ் தேவ்னானி சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த பஜன்லால் சர்மா புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று அவரை பதவி ஏற்க வரும்படி கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அழைப்பு விடுத்தார்.

* மபி,சட்டீஸ்கர் முதல்வர்கள் இன்று பதவி ஏற்பு

மபி முதல்வராக மோகன்யாதவும், சட்டீஸ்கர் முதல்வராக விஷ்ணு தேவ் சாயும் இன்று பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள லால் பரேடு மைதானத்தில் காலை 11 மணிக்கு நடக்கும் பதவி ஏற்பு விழாவில் மத்தியபிரதேச புதிய முதல்வராக மோகன்யாதவ் பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முதல்வருடன் துணை முதல்வர்கய் ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்டா மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் புதிய முதல்வர் விஷ்ணு தேவ் சாய் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் விழாவில் முதல்வராக பதவி ஏற்கிறார். இதற்காக ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த விழாவிலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* 3 மாஜி முதல்வர்களுக்கும் வாய்ப்பு மறுப்பு

மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநில தேர்தலில் பா.ஜ வெற்றி பெற்றாலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு முதல்வர் பதவி வழங்கவில்லை. சட்டீஸ்கரில் ராமன்சிங், மபியில் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே ஆகிய முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் முதல்வர் பதவிக்காக காத்திருந்தனர். ஆனால் 3 மாநிலத்திலும் புதிய மற்றும் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர்களை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்து பா.ஜ அதிர்ச்சி அளித்து உள்ளது. அதை விட மேலாக இவர்களில் ஒருவர்தான் முதல்வர் என்று வெளியான யூகபட்டியலில் கூட இவர்கள் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அனைத்து தரப்பிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவே, மூத்த தலைவர்களை கழற்றிவிட்டுவிட்டு, மோடி, அமித்ஷாவின் உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றும் புது முகங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக பா.ஜ முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கடைசி வரிசையில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேற்றம்

பஜன்லால் சர்மா, தற்போது நடந்த தேர்தலில் தான் முதன்முறையாக நிறுத்தப்பட்டார். சங்கனேர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை விட 48,081 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எடுத்த குழுப்புகைப்படத்தில் கூட கடைசி வரிசையில் தான் பஜன்லால் சர்மா அமர்ந்து இருந்தார். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டதால், தற்போது அவர் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

The post முதல் முறை எம்எல்ஏவுக்கு அடித்தது ஜாக்பாட்ராஜஸ்தான் புதிய முதல்வர் பஜன்லால் சர்மா: தியாகுமாரி, பிரேம் சந்த் பைரவா துணை முதல்வர்கள் appeared first on Dinakaran.

Tags : MLA ,Jagbhatrajstan ,Chief Minister ,Bhajanlal Sharma ,Thiakumari ,Prem Chand Bhairava ,Deputy Chief Ministers ,Jaipur ,Bajanlal Sharma ,Chief Minister of ,Rajasthan ,
× RELATED சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா,...