×

ராட்சத மிதவை மோட்டார் மூலம் நசரத்பேட்டையில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்: 2 நாட்களில் முழுவதும் சரிசெய்யப்படும் என தகவல்

பூந்தமல்லி: நசரத்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை, நெய்வேலியிலிருந்து வரவழைக்கப்பட்ட ராட்சத மிதவை மோட்டார் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இந்நிலையில், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட யமுனா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் இன்னும் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், வேலைக்கு செல்வதற்கும் பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட படகு மூலம் வந்து செல்கின்றனர்.

இப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் 8க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியினை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரபுசங்கர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், மழைநீர் வடிய தாமதமாவதால் நெய்வேலியில் இருந்து பிரத்யேகமாக அதிக குதிரை திறன் கொண்ட மிதவையுடன் கூடிய ராட்சத மோட்டார் வரவழைக்கப்பட்டது. அந்த ராட்சத மின் மோட்டார் மூலம் மழைநீரை அகற்று பணி நேற்று தொடங்கியது.

இந்த, மின் மோட்டாரானது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்கும்போது, அங்கு தேங்கும் மழைநீர் மற்றும் மணலை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மின் மோட்டார் மூலம் 20 டன் தண்ணீர், 18 டன் மணல் ஆகியவற்றை வெளியே எடுத்தால்தான் ஒரு டன் நிலக்கரியை எடுக்க முடியும். இந்த மிதவை ராட்சத மின் மோட்டாரின் பெயர் பாண்டுன். 6 டன் எடை கொண்ட இந்த மிதவை மின்மோட்டாரை கிரேன் உதவியுடன் கொண்டு வந்து பிரத்யேகமாக இந்த பகுதியில் வைத்து மழைநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் இந்த பகுதியில் முழுமையாக மழைநீரை அகற்றி இயல்பு நிலை திரும்பும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

The post ராட்சத மிதவை மோட்டார் மூலம் நசரத்பேட்டையில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்: 2 நாட்களில் முழுவதும் சரிசெய்யப்படும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Nasaratpet ,Poontamalli ,Nasarathpet ,Neyveli ,Dinakaran ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்