×

பாலத்தை தாண்டியும் சீறி பாய்ந்த தண்ணீர் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிப்பு; மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை வட்டம், மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தையின் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நீல வானத்து நிலவன் தலைமையில் கிராம மக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:- மாம்பாக்கம் கிராமம் அம்பேத்கர் நகரில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக நெடுஞ்சாலையின் குறுக்கே இருந்த தரைப்பாலம் மூழ்கி ஊருக்குள் வெள்ள நீர் புகுந்து குடியிருப்புகள் முழுவதும் பாதிக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த தரைப்பாலத்தை இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி இறந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு ரூ.60 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் 3 ஆண்டுகளாகியும் பணி முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் இருபுறமும் தற்காப்பு சுவர் போதுமான தூரம் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் குறைவான தூரத்திற்கு அமைக்கப்பட்ட தற்காப்பு சுவற்றின் உட்புறத்தில் அருகில் இருந்த தளர்வான மண்ணை எடுத்து நிரப்பியதால் மண் அரிப்பும் ஏற்படுகிறது. மேலும் பாலம் சரியான திசையில் கட்டப்படாததாலும், வெள்ளநீர் வெளியேறும் அளவிற்கு பாலத்தின் உட்பகுதியின் இடைவெளி அளவு போதுமானதாக இல்லாததாலும், மேற்புறத்திலிருந்து பாலத்தை நோக்கி வரும் வெள்ள நீரானது வெளியேற முடியாமல் தடுக்கப்படுகிறது.

எனவே மிக்ஜாம் புயல் காரணமாக புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்கும் மேலே 4 அடிக்கு வெள்ளநீர் ஆர்ப்பரித்து சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, பழையபடி அம்பேத்கர் நகர் பகுதி முழுவதும் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் அந்த பாலம் கட்டியும் எந்த பவனும் இல்லை. எனவே பாலத்தை முழுமையாக கட்டி முடிக்காத சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பாலத்தை சரியாக கட்ட வேண்டும். கண்காணிக்க தவறி, அரசுக்கு பல லட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்திய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் சரியான முறையில் பாலத்தை அமைத்து 150 குடும்பங்களின் உடமைகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post பாலத்தை தாண்டியும் சீறி பாய்ந்த தண்ணீர் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிப்பு; மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Awadi ,Thiruvallur ,Ambedkar ,Oothukottai ,Mambakkam ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்