×

ஆக்கிரமிப்பு வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் நடுவீரப்பட்டு ஊராட்சி ஏரி கரையை வெடி வைத்து தகர்த்த மர்ம நபர்கள்: 50 ஏக்கர் பயிர்களை சூழ்ந்த தண்ணீர்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நடுவீரப்பட்டு ஏரி கரை வெடி வைத்து உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், நடுவீரப்பட்டு ஊராட்சியில் பெரிய ஏரி, நடுத்தாங்கல் ஏரி, சித்தேரி ஆகிய 3 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் தலா ஒரு கலங்கல், மதகு உள்ளன. தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கி, கடந்த 3 வாரங்களாக பெய்த மழை மற்றும் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக பெரிய ஏரி, நடுத்தாங்கல் ஏரி, சித்தேரி ஆகிய 3 ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நடுத்தாங்கல் ஏரி மதகு, கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால், நாகத்தம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு ஆகிய பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, அதே பகுதியில் பயிரிடப்பட்ட சுமார் 50 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின.தகவலறிந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ஆர்டிஓ சரவணக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி, நடுத்தாங்கல் ஏரி ஆகிய ஏரிகளில் சுமார் 250க்கும் அதிகமான ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டியுள்ளனர். இந்நிலையில், ஏரி நிரம்பியதால் தண்ணீர் ஆக்கிரமிப்பு குடியிருப்பு வீடுகளில் புகுந்துள்ளது. இதனால், ஆக்கிரமிப்பாளர்கள் ஏரி மதகை வெடி வைத்து உடைத்துள்ளனர். இதனால், ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேறி உள்ளது. இந்த ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுப்பு மட்டும் செய்துள்ளனர். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றாமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், இந்த ஏரி மதகை ஆக்கிரமிப்பாளர்கள் வெடி வைத்து உடைத்துள்ளனர். எனவே, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* ஏரியை சீரமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
காஞ்சிபுரம்: நடுவீரப்பட்டு ஏரியின் உடைந்த மதகை சீரமைக்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், நடுவீரப்பட்டு ஏரியின் மதகு உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியினை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘குன்றத்தூர் அருகே 175 ஏக்கர் பரப்பளவு கொண்ட நடுவீரப்பட்டு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மதகு, நேற்று காலை உடைந்தது. இதனால், அப்பகுதிகளில் வசித்து வரும் மக்களை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்டு, அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.

மேலும், நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மூலம் உடைந்த ஏரி மதகை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது’ என்றார். இதனையடுத்து, நடுவீரப்பட்டு ஊராட்சி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளியில், ஏரி மதகு உடைந்து வெளியேறிய நீரால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிவாரண பொருட்களை வழங்கினார். ஆய்வின்போது, கலெக்டர் கலைச்செல்வி மோகன், பெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், நீர்வளத்துறை பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஆக்கிரமிப்பு வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் நடுவீரப்பட்டு ஊராட்சி ஏரி கரையை வெடி வைத்து தகர்த்த மர்ம நபர்கள்: 50 ஏக்கர் பயிர்களை சூழ்ந்த தண்ணீர்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Panchayat Lake ,Midwaira ,Sriperumbudur ,Madhuweerapattu lake ,Madhuweerapattu panchayat lake ,Dinakaran ,
× RELATED அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு