×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு: மிக விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவந்ததாக தமிழக அரசுக்கு பாராட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நாளை ஆலோசனை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை ஒன்றிய குழு நேற்று ஆய்வு செய்தது. 2015ம் ஆண்டை ஒப்பிடும்போது மிக விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பியதாக ஒன்றிய குழுவினர் தமிழ்நாடு அரசை பாராட்டினர். இதையடுத்து நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளை புரட்டி போட்டது. நான்கு மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகள், தெருக்கள் மழை வெள்ள நீரால் சூழப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்களையும் வெள்ள நீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் கடுமையான சேதம் அடைந்துள்ளது.

வெள்ள நீரை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஒரு சில நாட்களில் இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில், வெள்ள நிவாரணத்துக்கு ரூ.5,060 கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடிதம் எழுதினார். இதற்கிடையே, ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7ம்தேதி சென்னை வந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆய்வுக்கு பின் பேசிய ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய குழு சென்னை வரும். இந்த குழுவின் ஆய்வுக்கு பின்னர் தேவைப்படும் நிவாரண நிதி ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்படும்’ என கூறியிருந்தார். இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரேஷன் அட்டைகள் மூலம் தலா ரூ.6000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட ஒன்றிய குழுவினர் டெல்லியில் இருந்து தனித்தனி விமானங்களில் சென்னை வந்துள்ளனர். ஒன்றிய குழுவில் ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த திமான் சிங், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை இயக்குநர் ஏ.கே.சிவ்கேர், ஒன்றிய மின்துறை துணை இயக்குநர் பவ்யா பாண்டே, ஒன்றிய நிதி அமைச்சகம் (செலவினம்) துணை இயக்குநர் ரங்கநாத் ஆதம், நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை தலைமை பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஒன்றிய குழுவினர் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகம் வந்தனர். அவர்கள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், அரசு துறைகளின் செயலாளர்கள், காவல் துறை தலைவர் உள்ளிட்டவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பு குறித்து தமிழக அதிகாரிகள் ஒன்றிய குழுவினருக்கு விரிவாக எடுத்து கூறினர்.

இதையடுத்து நேற்று பிற்பகல் 12 மணிக்கு இரண்டு குழுக்களாக பிரிந்து மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய குழுவினர் சென்றனர். ஒரு குழுவினர் வடசென்னை பகுதியில், டிமெலஸ் சாலை சந்திப்பு, பட்டாளம் – அங்காளம்மன் கோயில் தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, சிவராவ் சாலை, மோதிலால் தெரு, ஸ்பன்சன் பாலம், வடபெரும்பாக்கம் கால்வாய் மற்றும் சாலை, கொசப்பூர், குளக்கரை, பர்மாநகர் இருளர் காலனி, மணலி – திடீர் நகர், பாலசுப்பிரமணியம் நகர், எம்.ஜி.ஆர். தெரு, பலராமன் தெரு, சிபிசிஎல் நகர், கலைஞர் நகர், எம்எப்எல் எதிரில், ஜகதாம்பாள் நகர், திருவொற்றியூர் பகுதியில் மணலியில் உள்ள துணை மின்நிலையம், மணலி பிரதான சாலை, சடையன்குப்பம், நெட்டுகுப்பம் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் காலை முதல் மாலை வரை ஆய்வு செய்தனர். மற்றொரு குழுவினர் தென்சென்னை பகுதியான வேளச்சேரி – ஏஜிஎஸ் காலனி, ராம்நகர், விஜிபி செல்வா நகர், புவனேஷ்வரி நகர், மடிப்பாக்கம் – குபேரன் நகர் 8வது தெரு, காமாட்சி மருத்துவமனை ரேடியல் சாலை சந்திப்பு, சாய் பாலாஜிநகர், நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை சிவன் கோயில் அருகில் தாம்பரம் – வேளச்சேரி நெடுஞ்சாலை, பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலை, மேடவாக்கம், பெரும்பாக்கம் செம்மொழி சாலை, ஒக்கியம் மடு – காரப்பாக்கம் பாலம், செம்மஞ்சேரி நூகாம்பாளையம் பிரதான சாலை, காந்தி நகர், தையூர் – ராஜிவ் காந்தி சாலை – மாமல்லபுரம் சாலை, கண்டிகை – கேளம்பாக்கம் – மாம்பாக்கம் – வண்டலூர் சாலை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தொகுதி எம்எல்ஏக்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

ஒன்றிய குழுவினருக்கு வரைபடம் மூலம் அரசு உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய குழுவினர் பார்வையிட்டபோது, அங்கிருந்த பொதுமக்கள் கடந்த 4ம் தேதி பெய்த அதிகனமழை காரணமாக எந்தளவுக்கு பாதிக்கப்பட்டோம் என்பதை எடுத்துக் கூறினர். மேலும், சாலைகள் பழுதடைந்து கிடந்த காட்சிகள் மற்றும் குடியிருப்பு அமைந்துள்ள பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாமல் மக்கள் பாதிக்கப்பட்ட காட்சிகளையும் ஒன்றிய குழுவினர் நேற்று மாலை வரை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று ஒன்றிய குழுவினர் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்கள். பின்னர், நாளை காலை 11.30 மணிக்கு தலைமை செயலகம் வந்து தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் வெள்ள பாதிப்பு குறித்து விரிவாக விளக்கம் அளிப்பதுடன், மனுவும் அளிக்கப்படும்.

இரண்டு நாள் ஆய்வை முடித்துக்கொண்டு ஒன்றிய குழுவினர் நாளை பிற்பகல் டெல்லி சென்று, உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்க உள்ளனர். இதன் அடிப்படையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிக்கான நிதியை அளிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, தென்சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட பின் ஒன்றிய குழுவின் தலைவரான குணால் சத்யார்த்தி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வெள்ள பாதிப்புகளை உடனடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி இன்று வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளை நாங்கள் ஆய்வு செய்தோம். புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. 2015ம் ஆண்டை ஒப்பிடும்போது மழை பாதிப்புகளுக்கு பிறகு மிக விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் மிகவும் குறைந்துள்ளது. தகவல் தொடர்பு, மின்சாரம் மற்றும் விமான நிலைய சேவைகள் உள்ளிட்டவை உடனடியாக சரி செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும் வெள்ள பாதிப்பில் இருந்து மீட்டெடுப்பதற்காக ஒன்றிய அரசு அனைத்து உதவிகளும் செய்ய தயார் நிலையில் உள்ளது’’ என்றார்.

வடசென்னை பகுதிகளில் மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து 3 பேர் கொண்ட ஒன்றிய குழு ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அந்த குழுவில் இடம் பெற்றுள்ள தலைமை பொறியாளர் விஜயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘வடசென்னை பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தோம். வடசென்னை பகுதி புயலால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. எந்த அளவிற்கான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி மிக குறுகிய காலத்தில் ஆய்வு தொடர்பான அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிப்போம். இதையடுத்து பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும்’’ என்றார்.

The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு: மிக விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவந்ததாக தமிழக அரசுக்கு பாராட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : UN ,Chief Minister ,Tamil Nadu Government ,K. Tomorrow ,Stalin ,Chennai ,Union Committee ,
× RELATED அனைத்திலும் சந்தேகத்துக்குரிய...