×

கம்பத்தில் வாலிபர் மர்மச்சாவு: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு

கூடலூர்: கம்பத்தில் வாலிபர் தூக்கிட்டு இறந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (25). இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் சிலருடன் கம்பம் மின்வாரிய அலுவலக தெரு பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்திய பின் நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர். ஆனால், நீண்ட நேரமாகியும் பிரேம்குமார் வரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த நண்பர்கள், மது அருந்திய இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரேம்குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் பிரேம்குமார் ஏற்கனவே இறந்து போனது தெரிய வந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. புகாரின்பேரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரேம்குமாரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், முன்விரோதம் காரணமாக யாரேனும் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கம்பம் அரசு மருத்துவமனை முன்பு தேனி-குமுளி சாலையில் இன்று காலை உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

The post கம்பத்தில் வாலிபர் மர்மச்சாவு: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ...