ஈரோடு: ஈரோடு ஜவுளி சந்தையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வியாபாரம் எதிர்பார்த்தபடி நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஜவுளி வியாபாரம் நடந்து வருகிறது. மேலும் ஐயப்ப பக்தர்கள் சீசனையொட்டி பக்தர்கள் அணியும் கருப்பு, நீலம், காவி வேட்டி, துண்டுகள், இருமுடி பைகள் உள்ளிட்டவைகள் விற்பனையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெளியூர்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. ஆனால், இந்த வாரம் நடந்த ஜவுளி சந்தையில் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். குறிப்பாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வருகை கடந்த வாரத்தை விட அதிகமாக இருந்தது. இதேபோல சில்லரை விற்பனையும் அமோகமாக நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன் விற்பனை கடந்த 2 வாரங்களாக நடந்து வருகின்றது. வெளிமாநில ஆர்டர்கள் ஓரளவு கை கொடுத்தது. கடந்த வாரம் நடந்த சந்தைக்கு வியாபாரிகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை. குறிப்பாக வெளிமாநில, மாவட்ட மொத்த வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. சில்லரை விற்பனை மட்டுமே ஓரளவு நடைபெற்றது. ஆனால், இந்த வாரம் மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெற்றது. குளிர்கால ஆடைகள், பெட்ஷீட் உள்ளிட்டவைகள் விற்பனை அதிக அளவில் காணப்பட்டது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
The post ஈரோடு ஜவுளி சந்தையில் கிறிஸ்துமஸ் வியாபாரம் அமோகம் appeared first on Dinakaran.