×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்குவது தொடர்பாக அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனை

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (12.12.2023) ”மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் பொது விநியோக திட்டக் கடைகள் மூலம் நிவாரண உதவியாக ரூ.6000 ரொக்கமாக வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

“மிக்ஜாம்” புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இதுகுறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக அமைச்சர்களும், இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதுமட்டுமின்றி, மின் வாரியப் பணியாளர்களும், மருத்துவப் பணியாளர்களும், தூய்மைப் பணியாளர்களும் இந்த மாபெரும் பணியில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டனர்.

மழையினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில், படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வெள்ளப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 09.12.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ”மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிடவும், இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்கள்.”

இதனடிப்படையில், நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகை வழங்க மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து இன்று (12.12.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நியாய விலை கடைகளில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், பொதுமக்களுக்கு முறையாக சேர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜெ.விஜயராணி மற்றும் சிறப்புப்பணி அலுவலர் (தமிழ்நாடு கூட்டுறவு வங்கி) எம்.பி.சிவன்அருள்(ஓய்வு) உட்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்குவது தொடர்பாக அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,KR Periyakaruppan ,Cyclone Mikjam ,Chennai ,Minister of Cooperatives ,KR. Periyakaruppan ,Mikjam ,
× RELATED காரைக்குடியில் என்என்எல் டிரைவ்...