×

ங போல் வளை-யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

இருளிலிருந்து அருளுக்கு…

ஒரு சில இடங்களுக்குச் சென்றுவிட்டு வந்தால், நம்மை அறியாமலேயே நாம் சோர்வாகவோ, சற்றுப் பதற்றமாகவோ இருப்பதைக் கவனிக்கலாம். உதாரணமாக, மருத்துவமனையில் ஒரு நண்பரின் நலம் விசாரிக்கச் செல்கிறீர்கள் அப்போது சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு வருகிறீர்கள் என வைத்துக்கொள்ளலாம். வந்தவுடன் ஒரு சோர்வும், அசதியும் சில சமயங்களில் ஒருவிதப் பதற்றமும் நம்மில் குடியேறியிருக்கும். குளிக்க வேண்டும் எனத் தோன்றும்.

மருத்துவமனை மட்டுமல்ல, பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு காவல் நிலையத்துக்கு, மயானத்துக்கு எனச் சில இடங்களுக்கு அந்த எதிர்மறைத் தன்மையும் நம்மில் சோர்வை ஏற்படுத்தும் அம்சமும் உண்டு. அது இடங்களுக்கு மட்டும் பொருந்தாது, சில சூழ்நிலைகளில், சில மனிதர்களுடன் உரையாடுகையில், சில வகை உணவுகளை உண்ட பின் நாம் சோர்வும், எதிர்மறைத் தன்மையும் அடைகிறோம். ஏன் இப்படி நிகழ்கிறது என்பதற்கு நாம் முன்னர் பார்த்த ‘குணங்களுடன்’ நேரடித் தொடர்புள்ளதாக மரபு சில அவதானிப்புகளை முன்வைக்கிறது. அத்துடன் இது போன்ற சூழலை மனிதர்களை நாம் கையாள்வது எப்படி என்பதையும் வகுக்கிறது.

முக்குணங்களில் அடிப்படை குணமான, ‘தமோ’ குணமே மேலே சொன்ன எதிர்மறை அம்சம் என நாம் உணரக்கூடியவற்றின் அடிப்படை. முக்குணங்களும் இணைந்தே இந்தப் பிரபஞ்சம் இயங்க முடியும் என்பது நியதி. ஆகவே, தமோ குணம் என்பதை எதிர்மறைப் பண்புடன், தவிர்க்க வேண்டிய அம்சம் என்றோ, மோசமான விஷயம் என்றோ புரிந்துகொள்வதைவிட, அடிப்படை குணமான ‘தமோ’ குணத்தின் சாதக பாதங்களைத் தெரிந்துகொண்டு, மற்ற இரு குணங்களின் துணை கொண்டு ‘குணாதீதன்’ என இந்திய ஞானம் சொல்லும் குணங்களைக் கடந்தவன் எனும் நிலையே அடைய முயற்சிக்கலாம். குணங்களின் சமநிலையைப் பேணுவதால் அடையப்பெறும் அன்றாட நன்மைகளை அடைந்து வாழ்வை இன்னும் சிறப்பாக்கிக்கொள்ளலாம்.

சோம்பேறித்தனமும், செயலின்மையும், தமோ குணத்தின் வெளிப்பாடுகள் என்பது போலவே, உறக்கம் போன்ற அத்தியாவசியத்துக்கும் தமோ குணமே ஆதாரம். ஆகவே, தமோகுணத்தின் பல்வேறு நிலைகளைப் புரிந்துகொள்வது நமக்குத் தெளிவைக் கொடுக்கும். இன்றைய காலகட்டத்தில் மாசாக்கிஸ்ட் எனப்படும், தங்களைத் தாங்களே சித்ரவதை செய்துகொள்பவர்களும், சாடிஸ்ட் எனப்படும் அடுத்தவரை துன்பத்தில் ஆழ்த்துபவர்களும் மட்டும் தமோ குணம் நிறைந்தவர்கள் அல்ல.

மாறாக, எதையும் வெளிப்படுத்தாமல், தங்களுக்குள்ளேயே அழுத்திப் புதைத்து வைத்துக்கொள்பவரும், தங்களுடைய பழைய நினைவுகளை மீட்டெடுத்து, அதில் துன்பமடைபவரும் ஒருவகையில் தமோ குணத்தை அதிகமாக கொண்டவரே.இந்திய வேதாந்த மரபின் இந்த நூற்றாண்டின் முக்கியமான வேதாந்தியும், ஞானியுமான குரு நித்ய சைதன்ய யதி, அவர்கள் பதஞ்சலியின் யோக சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் தமோகுணம் சார்ந்து மிக முக்கியமான அவதானிப்புகளை முன்வைக்கிறார்.

ஸ்திதி எனும் உறைந்து நின்றுவிடக் கூடியது எதுவோ அதுவும் தாமஸமே. என்கிறார். அதீதமாக வெளிப்படுவதும் அதுவே. இந்த தாமச குணத்தை ஐந்தாகப் பகுக்கிறார்.
முதலில் ‘தாமசம் ‘ எனப்படும் மாயைக்கு உட்பட்ட, அதாவது ஒருவருக்கு தெரியாமல், அறியாமல் தமோ குணத்தில் இருத்தல். உதாரணமாக, தூங்கும் ஒருவரைப் பார்த்து ‘அவனையே அறியாமல் நல்ல தூக்கம்’ என்கிறோம். இது அறியாமல் நம்மில் நிகழும் தாமசம் எனும் இருள்.

இரண்டாவது ‘மோஹா’ எனப்படும் நினைவில் சுகத்தையும், துக்கத்தையும் மாறி மாறி மீட்டெடுத்து, அதில் திளைத்தல், அதாவது பத்து வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சுகமான அனுபவம் ஒன்றை இன்று நினைத்துப் பார்த்து, அதே போல இல்லையே என வருந்துதல். அன்று நடந்த துன்பகரமான ஒரு நிகழ்வை இன்று மீண்டும் நினைத்துப் பார்த்துச் சோர்வடைதல்.

மூன்றாவதாக. ‘மஹா மோஹா’ எனப்படும் நினைவும், மறதியும், மீண்டும் அதே வாழ்வுக்கு ஏங்குதலும், அதாவது இருபத்தி ஐந்து வயதில் இருந்த அதே ஆரோக்யம் இன்று இல்லையே என கவலைகொள்வதும், அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தும், ஒப்பனைகள், உடல் மொழி நடிப்புகள், மூலமாகத் தன்னை இளைஞர் எனக் காட்டிக்கொள்ள போடும் நாடகங்கள். உடல், மனம், உணர்ச்சிகள் என எல்லா வகையிலும் மனிதர்கள் இதைச் செய்துகொண்டே இருப்பதைக் காணமுடியும். முடிந்து போனவற்றுக்கு ஏங்குதல், இருப்பவற்றை ஏற்றுக்கொள்ளாமை.
துன்பத்தை நினைவுகூரல் மட்டுமல்ல, நல்ல இனிமையான, நம் வாழ்வை சீராக்கக்கூடிய நினைவுகளை மறந்துவிடுவதும் ‘மோஹா’ எனும் தமோ குணமே.

வாழ்வின் முக்கியமான காலக் கட்டத்தில் கிடைத்த ஆசிகள், நல்லாசிரியரின் சொற்கள், வாழ்வைத் திசை திருப்பிய நற்சம்பவங்கள் இவை அனைத்தும் மறந்து போவதும், இதில் அடங்கும். நான்காவதாக, தாமிசம் எனப்படும், தெரிந்தே செய்யும் தவறுகள், தவறை உணர்ந்த பின்னரும், அதிலிருந்து மீள முடியாமை, மனம் அதில் கட்டுண்டு கிடத்தல், தவறான காமத்துக்கு அடிமையாகுதல், போதை அல்லது உணவுப் பழக்கத்துக்கு அடிமையாகுதல், புகழ் அல்லது பதவியின் பொருட்டு அடிமைப்பட்டு அதை இழந்து விடுவோமோ எனும் பயத்தால், தெரிந்தே செய்யப்படும் தவறுகள், குற்றங்கள் அதைத் தொடர்ந்து மேலும் தவறுகள் குற்றங்கள் என பெருக்கிக்கொள்ளுதல்.

அடுத்ததாக ‘அந்தஹ் தாமிசம்’ எனும் அடர் இருள். முன்வினைப் பதிவுகள் மூலமாகவும், இப்பிறவியில் திரட்டிக்கொண்ட அனுபவங்கள் மூலமாகவும் ஒருவர் அடையக்கூடிய தமோ குணம். இது, தன்னையும் அழித்துப் பிறரையும், சூழலையும் அழிக்கும் வரை தொடர்வது. உண்மையில் துன்பத்தில் இருக்கும் ஒருவர், ஒரு சில முயற்சிகளுக்குப் பின் அதிலிருந்து வெளிவந்துவிடுவார். அப்படி வெளிவராமல், மிக நீண்ட காலம் துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்கிறார் என்றால், அதுவும் அடர் இருளே, அதாவது அவருடைய ஆழத்தில் ‘துன்பத்திலிருந்து’ வெளிவரும் எண்ணமே இல்லை. ஒருவகையில் தன்னுடைய துன்பத்தில் திளைக்கவே அவர் விரும்புகிறார். இவ்வகை மனிதர்களை மீட்பது மிகவும் கடினம்.

தமோ குணத்தின் இந்த நிலை வரை சென்று சேராமல் தன்னைத் தற்காத்துக்கொள்வது நம் அனைவரின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்று.யோக மரபு சுத்திகரிப்புப் பயிற்சிகளை முதன்மையான பாடத் திட்டமாக வைத்திருப்பது மேலே சொன்ன இந்த காரணங்களுக்காகத்தான். ஒரு சாதகன் தமோ குணத்தின் எந்த அடுக்கில் நின்றுகொண்டிருக்கிறான்? என்பது நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும், அப்போது மட்டுமே அதைக் களைவதற்கான பிரத்யேகமானப் பயிற்சிகளைக் கண்டறிந்து, தனது சாதனாவில் விரைந்து முன்னேற முடியும்.

வெறுமனே தனக்குத் தமோ குணம் இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து வைத்திருப்பதால் எந்தப் பிரயோஜனமுமில்லை. இங்கேதான் ஒரு மரபார்ந்த கல்வியும், அதன் ஆசிரியரும் அவனுடன் தயக்கமின்றி உரையாடி, அவனுக்கான பாடத்திட்டம் ஒன்றைத் தயார் செய்துகொடுக்கிறார்கள்.பெருங்கூட்டமாக இதைக் கற்றுக்கொள்ள முடியாது. ஆசிரியரின் தனிப்பட்ட கவனிப்பு மிகவும் அவசியமானது இந்த இடத்தில்தான்.

அப்படி ஒரு தனிப்பட்ட பாடத் திட்டம் இல்லாதபோது, இருபது வருடங்கள் தியானத்தில் ஈடுபட்டும், அதே கொந்தளிப்பான, பயம் மிக்க, பதற்றமான ஒரு ஆளாகவே இருப்பார். அனைத்து உணர்ச்சிகளையும் தியானம் என்கிற பெயரில் உள்ளே அழுத்தி வைத்திருப்பார். இது உடல், மனம் சார்ந்த நோயில் கொண்டு சேர்க்கும்.

சக்தி சலான ஆசனம்

இந்த பகுதியில் நாம் சக்கி சலான ஆசனம் எனும் பயிற்சியைக் காணலாம், உடலின் அக்னித்தன்மையைச் சீர் செய்வதிலும், தேவையான போஷாக்கை உணவிலிருந்து பெற்று உடலுக்கு ஆற்றலைத் தருவதிலும், வயிற்றுப்பகுதியில் தேவையற்ற கொழுப்புகளைக் குறைப்பதிலும், இலகுவான முதுகுத்தண்டை வழங்குவதிலும் இது முதன்மையான பயிற்சி. கால்கள் இரண்டையும் அகற்றிய நிலையில் வைத்து, மாவு அரைப்பது போல முன்னும் பின்னுமாகச் சுழல வேண்டும். முன்புறம் சுழலும்பொழுது மூச்சை வெளியிடவும், பின்னால் சாய்கையில் மூச்சை உள்ளிழுக்கவும்.

The post ங போல் வளை-யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Vela Yoga ,Selandararajan.ji ,
× RELATED ங போல் வளை-யோகம் அறிவோம்!