×

பகவத்கீதை உரை: ஆசையின் மரணமே, அடக்கத்தின் உயிர்ப்பு!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 61 (பகவத்கீதை உரை)

கர்மம், அகர்மம் பற்றிய ஆசாரிய புருஷர்களின் கருத்துகளைப் பார்க்கலாம்.

ஸ்ரீராமானுஜர்

ஒருவன் உணவை சமைக்கிறான். அதாவது, சமைத்தல் என்ற கர்மம் அவனிடம் நடைபெறுகிறது. தினமுமான இந்தப் பழக்கம், நாளாவட்டத்தில் ‘நன்றாக சமைத்தல்’ என்ற ஞானத்தில் கொண்டு சேர்க்கிறது. இந்த அனுபவம் கூடக் கூட, சமைப்பது என்பதை வெகு இயல்பாக, அது பற்றிய கருத்தே இல்லாமலும் அவனை சிறப்பாக செயல்பட வைக்கிறது. அதாவது, கர்மத்தில் (சமைப்பதில்) அகர்மத்தைக் (அது பற்றிய உணர்வே இல்லாதது) காணுதல் என்பது, இப்படி செம்மையாக கர்மம் (செயல்) புரிபவருக்கு, அந்த அனுபவம் ஞானத்தை அருள்கிறது.

இவ்வாறு சமையல் பற்றிய ஞானம் வந்த பிறகு, அச்சமையல் தொழில் இன்னும் கூடுதல் திறமையுடன் மேம்படுகிறது. இதுவே அகர்மத்தில், கர்மத்தைக் காணுதல் என்று பொருள்படுகிறது. இந்த வகையில் கர்மம் ஞான வளர்ச்சிக்குத் துணை போகிறது; ஞான வளர்ச்சி திறமையுடன் தொழில் புரிதலை உருவாக்குகிறது. நல்வாழ்க்கை என்ற கர்மம், ஆத்ம ஞானத்தை உண்டு பண்ணுகிறது. ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் தம் வாழ்க்கையை மிகவும் மேலானதாக செப்பனிட்டு வாழ்கிறார்கள்.

ஸ்ரீமாத்வாச்சார்யார்

ஒருவன் செய்கிற கர்மங்களுக் கெல்லாம் தானே கர்த்தா என்று அவன் எண்ணுகிறான். உண்மையில் அந்த கர்மங்கள் யாவும் மகா விஷ்ணுவினுடையவை ஆகும். தான் கர்த்தா என்ற எண்ணத்தையும், அகங்காரத்தையும் அகற்றி, தன் மூலம் நடைபெறும் கர்மாக்கள் எல்லாம் பகவானுடையவை என்ற எண்ணத்தில் நிலைத்திருப்பவனே கர்மத்தில் அகர்மத்தைக் காண்பவனாகிறான். ஒருவன் கனவு காண்கிறான் என்றால், அந்த நிகழ்ச்சிகளுக்கும் அவற்றில் அவன் செய்யும் கர்மங்களுக்கும் அவன் காரணமல்ல. கனவு என்பது வெறும் காட்சி. அதில் நிகழும் கர்மங்களும் காட்சிகளே. இவற்றிற்கு அவன் பொறுப்பானவனாக முடியாது.

கனவு காண்பவன் இவனாகவே இருந்தபோதிலும், அதில் வரும் கர்மாக்களுக்கு மஹாவிஷ்ணுவே காரணம். ஆகவே, தான் கர்த்தாவாக இல்லாத நிலைமையில் அவன் அகர்மத்தில் இருக்கிறான். அவனே தன் கனவிலும் விஷ்ணுவின் கர்மம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று உணர்வானானால் இவன் அகர்மத்தில் கர்மத்தைக் காண்பவனாகிறான். ஒருவன் தன்னுடைய கர்மம் என்று எண்ணிச் செய்வதும், அதை அகங்காரமில்லாமல் செய்வதும் ஆகிய எல்லா கர்மாக்களும் விஷ்ணுவுக்கே உரியன. இதைப் புரிந்து கொண்டவன் புத்திசாலியாகிறான்.

ஸ்ரீஸ்ரீதர சுவாமிகள்

(பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, கோவர்த்தன மடத்தின் தலைவர்)

ஒருவனை பந்தப்படுத்துவது அவன் இயற்றும் கர்மாக்களே. ஆனால், அகங்காரமில்லாமல், தற்குறியாக இல்லாமல் ஈஸ்வார்ப்பணமாக அவன் இயற்றுவானால், அந்த கர்மங்கள் அவனை பந்தப்படுத்துவதில்லை. இப்படி பற்றற்று செய்யப்படும் கர்மம், அவனுடைய பழைய பந்தங்களையும் அகற்றுகிறது. ஆக, கர்மத்தில் அகர்மத்தைக் காண்பது என்றால், பந்தத்தை உண்டு பண்ணுகிற கர்மத்தை, அதிலிருந்து விடுபடும் கர்மமாக மாற்றுவது என்று பொருள் கொள்ளலாம்.

அசிரத்தை அல்லது அறியாமையினால் ஒருவன் நல்வினை எதையும் செய்யாதிருப்பானானால் அதனால் அவனுக்குக் கேடு விளைகிறது. அதனால் கர்ம பந்தமும் அதிகரிக்கிறது. இங்கே நல்வினையை செய்யாதுவிட்டது அகர்மமாகிறது. இதனால், விளையும் கேடு கர்மமாகிறது. இப்படி அகர்மத்தில் கர்மத்தைக் காண்பவனே விவேகி.

சுவாமி விவேகானந்தர்

சந்தடி மிகுந்த சமூக வாழ்க்கையாகட்டும், நிசப்தமான ஏகாந்த வாழ்க்கையாகட்டும், இரண்டிற்குமே மனம் பண்பட்டிருக்க வேண்டும். கர்மத்தில் அகர்மம் என்றால் என்ன? அகர்மமாகிய யுத்தம் புரிதலும், அதற்கு ஒப்பானதுமாகிய பல்வேறு அலுவல்களுக்கிடையே மனது ஒரே சாந்த சொரூபமாக இருத்தல்தான். அகர்மத்தில் கர்மம் என்பது என்ன? வெளிப்பார்வைக்கு வினையாற்றுதல் என்று ஏதும் செய்யாமல், ஏகாந்தமாக ஒரு குகையில் அமர்ந்திருக்கும்போது மனது இடைவிடாத அருவி போன்று ஈஸ்வரனை நாடிச் செல்லுதலே அகர்மத்தில் கர்மம் என்பதாகும்.

ஒரு சார்பாக மனம் பண்பட்டிருக்குமானால் அது அரைகுறையானது. சிலர் ஏகாந்த வாசத்தில் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சமூகக் குழப்பத்தில் சிக்குவார்களானால் நிலை குலைந்து தடுமாறுகிறார்கள். இன்னும் சிலர் எப்போதும் மக்கள் கூட்டத்திற்கிடையே வாழ்ந்து வருகிறார்கள்.

சிறிது நேரம்கூட தனியாக இருப்பதற்கு இவர்களுக்கு இயலுவதில்லை. ஆனால், இவர்களை ஏகாந்த வாசத்தில் ஈடுபடுத்தினோமானால் இவர்களுக்குப் பைத்தியமே பிடித்து விடும். தனியாக வசித்திருக்க மட்டும் தெரிந்து கொண்டவர், சமூகத்தைச் சார்ந்திருப்பதை மட்டும் தெரிந்து கொண்டவர் என்று இரு பிரிவினரும் அரைகுறையான பயிற்சி பெற்றவர்களே. ஏகாந்தத்தில் ஈஸ்வர சிந்தனை என்ற சிறந்த செயல் நடைபெறுவதும், சமூக சந்தடிகளுக்கிடையில் சாந்தமே சித்தத்தில் குடி கொண்டிருப்பதுமான இருவித இயல்பிலும் பயிற்சி பெற்றவரே நிறைமனிதர் ஆவார்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு அதையே வேகமாக சுற்றிச் சுற்றி வருகிறான் ஒரு பாலகன். அவனுக்கு விழுந்து விடுவோம் என்ற பயமில்லை. ஏனென்றால் அவன் அத்தனை உறுதியாகத் தூணைப் பற்றியிருக்கிறான். அதுபோல, ஈஸ்வரனிடத்தில் மனதை திடமாக நிறுத்திவிட்டு நீ உனது கர்மாக்களைச் செய். அப்போது உனக்கு அபாயங்களே நேரமாட்டா.

சுவாமி சித்பவானந்தர்

ஸ்ரீகிருஷ்ணனும், அர்ஜுனனும் போர்க் களத்துக்கு வருகிறார்கள். பகவான் தேர் ஓட்டுகிறார். பார்த்தன் போருக்கு ஆயத்தமாகிறான். யாரை எதிர்த்து எத்தகைய போர் புரிந்தாக வேண்டும் என்ற எதார்த்தம் இப்போதுதான் அர்ஜுனனுக்கு திடீரென்று புரிகிறது. உடனே வில்லையும் அம்பையும் தள்ளி வைத்து விடுகிறான். ‘வேண்டாம் இவ்வெம்போர்’ என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு செயலற்று அப்படியே தேர்த்தட்டில் உட்கார்ந்து விடுகிறான்.

ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட முடியாத இரண்டு காட்சிகளை இப்போது கிருஷ்ணனும், அர்ஜுனனும் தருகிறார்கள். அகர்மத்துக்கு விளக்கமாக அமைகிறது பகவானுடைய செயல். தேரோட்டும் கடமை அவருடையது. அதில் பூட்டியுள்ள வேகம் வாய்ந்த வெண்குதிரைகளை நான்கு வார்களால் கட்டி இடது கையால் பற்றியிருக்கிறார்.

அர்ஜுனனுக்கு உபதேசம் செய்வதன் புறச்சின்னமாக வலது கையில் அவர் சின் முத்திரை தாங்கியிருக்கிறார். இரு கரங்களும் இப்படி செயல்களில் ஈடுபட்டிருக்கும்போது அவருடைய முகம் மற்றொரு காட்சியைத் தருகிறது. ஆமாம், அது நிர்மலமாக, சாந்தமாகத் திகழ்கிறது. மனம் மலை போல அசையாமலிருப்பதை அந்த முகம் விளக்குகிறது. கர்மம், ப்ரகிருதியோடு சேர்ந்தது. புருஷன் கர்மம் செய்வதில்லை என்ற பேருண்மையை ஸ்ரீகிருஷ்ணன் என்ற பெயர் பூண்டுள்ள மூர்த்தியானவர் விளக்குகிறார். விரைந்து வினையாற்றுவதற்கிடையில் சற்று ஓய்வு – கர்மத்தில் அகர்மம் என்ற கோட்பாட்டுக்கு அவரே சான்றாகிறார்.

இங்கே அர்ஜுனன் வில்லையும், அம்பையும் தூர எறிந்துவிட்டு செயலற்றவனாக நிற்கிறான். பெயரளவில் அவன் வினையைத் துறந்துவிட்டான். அவனுக்கு மனதுக்குள் ஒரே குழப்பம். பாசமும், குரு பக்தியும் அவனை அல்லல்படுத்துகின்றன. மற்றொரு புறம் வேதனை துளைத்தெடுக்கிறது. அகம் தடுமாறுவதை அவன் முகம் காட்டுகிறது. கர்மத்தைத் துறந்தவனாகக் காட்டிக் கொள்ளும் அவன் கர்மத்தில் காய்கிறான். அவனுடைய இந்த நிலையே அகர்மத்தில் கர்மமாகும்.

யோகி ஒருவன் உலக வாழ்க்கையை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதை யோகேஸ்வரனாகிய கிருஷ்ணன் தாமே நடத்திக் காட்டுகிறார். முறை தெரியாமல் மனிதன் ஏமாற்றம் அடைந்துவிடலாகாது என்பதற்கு அர்ஜுனனுடைய கீழ்நிலையே உதாரணமாகும். என்னைப் போலவே பிற எல்லோருடைய பாஷ்யங்களிலும் உள்ள உட்கருத்து இந்த இருவரும் தரும் காட்சியில் அடங்கியுள்ளன. இவற்றைத் துருவி ஆராய்பவன் புத்திமானாகிறான்.

இவனே சிறந்த யோகியாவான். முக்தியோடு இகபரம் இரண்டையும் பெற வல்லவனும் அவனே. ஸ்ரீராமகிருஷ்ணர் வெளித் தோற்றத்தில் அகர்மத்தில் இருந்தார். உள்ளே கடவுள் நாட்டம் என்ற பெரிய கர்மம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. விவேகானந்தர் லோஹிதம் என்ற பெரிய கர்மத்துக் கிடையில் உள்ளே ஆத்ம சொரூபம் என்ற அகர்மத்தில் நிலைத்திருந்தார்.

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காமஸங்கல்பவர்ஜிதா
ஞானாக்னிதக்தகர்மாணம் தமாஹு பண்டிதம் புதா (4:19)

‘‘எந்த ஆசை அடிப்படையிலும் அல்லாது, எந்தப் பிரதிபலன் நோக்கமும் இல்லாது, கர்மாக்களை இயற்றுபவனைப் பண்டிதன் என்று ஒரு ஞானி போற்றுவார். ஏனென்றால் அந்த கர்மாக்கள் எல்லாம் ஞான அக்னியால் எரியூட்டப்பட்டவை.’’ யார் மனதில் ஞானாகனி எரிந்துகொண்டிருக்கிறதோ, அவரை ஆசை நெருங்குவதில்லை. அப்படி நெருங்குமானால் அது உடனே பஸ்மமாகிவிடும். இப்படிப்பட்டவரே பண்டிதன். இந்தப் பண்டிதத் தன்மை கல்வி அறிவால் வருவதில்லை, வர முடியாது. ஏனென்றால் கல்வி கற்றலின் தன்மையே அடக்கத்தைத் தருவதாகவும், அகங்காரத்தைத் தருவதாகவும் இரண்டாகவும் வினைபுரியும்.

மெத்தப் படித்தவனின் மௌனம் அவனை ஞானவழியில் இட்டுச் செல்கிறது. அதேசமயம் அவனை அகங்காரமுடையவனாகவும் ஆக்குகிறது. மொத்தம் படித்தவர் என்று யாரும் இல்லை என்பதால் ஏற்படும் விளைவு இது. பிறந்தது முதல் இறப்புவரை ஒவ்வொரு விநாடியும் படித்தும், அனுபவித்தும் தெரிந்து கொள்ள இந்த உலகம் எத்தனையோ விஷயங்களை நம் முன் கொட்டுகிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக அத்தனையையும் அறிந்துகொள்ள நமக்கு ஒரு ஜன்மம் போதாததாகி விடுகிறது! இவ்வளவு ஏன், தெரிந்துகொண்ட அல்லது அறிந்துகொண்ட ஒருசில விஷயங்களிலும்கூட முழுமையான அறிவைப் பெற முடியவில்லையே!

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இதுதான் முடிவு என்று எல்லையை வரையறுக்க முடியவில்லையே! இதுதான் எல்லை என்று நாம் நினைத்துக்கொண்டு அந்தக் கோட்டைத் தொடும்போது அது நம்மை விட்டகன்று மேலும் சில பரப்புகளைக் கடந்து அந்த முனைக்குப் போய் நம்மைப் பார்த்து ஏளனம் செய்கிறதே!

ஆக, கல்வியில் முழுமை என்பது எங்கே இருக்கிறது, என்னவாக இருக்கிறது? அந்த இலக்கை நிர்ணயிக்க முடியாததால்தான், யாவர்க்குமே கற்றது கைம்மண் அளவேயாகிறது! இந்த நிலையில் எந்த அளவுக்கு அமைதி காக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் ஞானம் பெறுகிறோம். வேடிக்கை பாருங்கள், உலகாயத விஷயங்களில் நாம் கற்றது கைம்மண் அளவேயானாலும் நம்மால் ஞானம் பெறமுடிகிறது! அதாவது ஞானம் பெற கல்விக் கடலை முழுவதுமாகக் குடிக்கவேண்டிய அவசியம் இல்லை.

‘‘ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!’’

– என்று கம்பர் எத்தனை அடக்கத்துடன் தன் ராமாயணத்தை ஆரம்பிக்கிறார்!

கல்வி மற்றும் கற்றலின் பரிமாணத்தைப் பாற்கடலுடன் அவர் ஒப்பிடுகிறார். அந்த மகா சமுத்திரத்தை அப்படியே குடித்துவிட ஓர் அற்பப் பூனை ஏங்குவது போலதான், தான் ராமனின் கதையைச் சொல்ல முற்படுவதும் என்று துவக்கத்திலேயே அடக்கம் காக்கிறார். இந்த அடக்கம் காரணமாகவே அவர் பண்டிதராகிறார், ஞானம் பெற்றவராகிறார். ராமனைப் பற்றி சிந்திப்பவர்களும், அவர் புகழைப் போற்றுவோருக்கும், இயல்பாகவே இந்த அடக்கம் தானாக அமைந்துவிடும் என்பதற்கு கம்பர் ஓர் உதாரணம்.

இந்த உணர்வு, கல்விக்கு மட்டுமல்ல, செல்வம், வீரம், கொடை, புகழ், சமுதாயப் பணி என்று எல்லா துறைகளுக்கும் பொருந்தும். ஏன், நம் வீடுகளிலேயே, அதிகபட்சமாக நாலைந்து உறுப்பினர்களிடையே குடும்பத் தலைவராகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டவர்தான் எத்தனை அகங்காரம் மிகுந்தவராக இருக்கிறார்! ஆசையின் மரணத்தில்தான் அடக்கம் உயிர் பெறுகிறது. தேவைகளின் கட்டுப்பாட்டில்தான் அடக்கம் பரிமளிக்கிறது. பட்டம், பதவிகளெல்லாம் மதிப்பற்றவையாகக் கருதப்படும்போதுதான் அடக்கம், மதிப்பு மிகுந்ததாகிறது.

இதை பண்டிதன் உணர்வான். இதனை ஞானி அறிவான். தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பும் ஆசைதான், உடலுக்கு அலங்காரம் தேவை என்கிறது. ஆபரணங்களைப் பூட்டச் சொல்கிறது. தன்னைப் பிறர் வியந்தோ, பொறாமையுடனோ பார்க்கச் சொல்கிறது.தன் சொல்லுக்குப் பிறர் கட்டுப்படவேண்டும் என்ற அகங்காரம்தான் பேச்சில் கடுமையைக் கூட்டுகிறது. உடலசைவில் முரட்டுத் தனத்தை ஏற்றுகிறது. பழக்கத்தில் பகையை உருவாக்குகிறது. பாரம்பரியமாக வன்மத்தை நீட்டிக்கிறது.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post பகவத்கீதை உரை: ஆசையின் மரணமே, அடக்கத்தின் உயிர்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Kunkumum Anmigam ,Srikrishna Amutham ,
× RELATED முத்துக்கள் முப்பது-சித்திரை மகளே வருக! சீர் நலம் எல்லாம் தருக!