×

சிறுகதை-கடன்

நன்றி குங்குமம் தோழி

தனலட்சுமி நடந்து கொண்டிருந்தாள். மனதின் பாரம் கால்களை தளர்வாக்கியிருந்தது. தெருவில் போகும் யாராவது ‘‘என்ன தனம்..?”” என்று கையைத் தொட்டாலே கீழே விழுந்து விடுவாள்.அந்தளவுக்கு தளர் நடை.இடுப்பில் இருந்த பிள்ளை நழுவிய மாதிரி இறங்கவே, அன்னிச்சையாய் சட்டென்று தூக்கி ஏற்றினாள். கோழிக்கு குஞ்சு பாரமா என்ன..? அவள் இருந்த மனநிலையில் இடுப்பில் இருந்த முரளி இருமடங்கு கனமாகியது போல ஒரு பிரமை. கையில் இருந்த மாற்றுத் துணிகளும், பால்பாட்டில், பிஸ்கெட் அடங்கிய துணிப் பை இரும்புக் குண்டாய் இறுக்கியது.

‘‘ஏ அப்பு இப்படிப் பண்ணுன…போயும் போயும் இந்தக் கொணங்கெட்டவங்கிட்டப் போயி ஏந்தான் பணம் வாங்கின..?”ஆயிரத்தெட்டாவது முறையாக புலம்பினாள். அவள் புலம்பிய அந்தக் குணங்கெட்டவன் அவள்‌ புருஷன் சேகரன்தான். இத்தனைக்கும் அவள் தகப்பன் வேலய்யன் கேட்டுக் கடன் வாங்கவில்லை. அவன் மூத்த மாப்பிள்ளையிடம் இரண்டாவது பெண் வீரலட்சுமியின் திருமணத்தின் போது, ஒரு பத்தாயிரம் ரூபாய் ஒப்புப் பணத்தை(வரதட்சணை)கொடுக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்க, ‘‘நாந் தாரேன் மாமா” என்று சேகரன் தான் எல்லோர் முன்னிலையிலும் பெருமை பீற்றிக் கொள்ளக் கொடுத்தான். அவன் அதை திருப்பியும் கேட்டிருக்க மாட்டான்.

கொளுந்தியாவுக்கு எழுதிய மொய்ப்பணமாக நினைத்துக் கொண்டு இருப்பான்.அந்தளவுக்கு அவன் வசதியாகத்தான் இருந்தான். சொந்தமாக பவர்லூம் தறி போட்டிருந்தான். நல்ல வரும்படி.இரண்டொரு நிலம் கூட வாங்கிப் போட்டிருந்தான்.ஆனால் வேலய்யன்தான் சேகரன் கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘மாப்பிள்ள தெய்வமாட்டம் கொடுத்துதவினீங்க..எந் தலய அடகு வெச்சாவது திருப்பித் தந்திர்றேன்”என்று நாத்தழுதழுக்க கண்ணீர் விட்டான். சேகரனும்,‘‘அதனாலென்ன மாமா பையத் திருப்பித் தாங்க” என்று விட்டான் பெருந்தன்மையாக.

அப்போது தனலட்சுமி கர்ப்பம் தரிக்கவே இல்லை.அதற்குப் பிறகு கர்ப்பமாகி , கையில் வைத்திருக்கும் முரளிக்குக் கூட இந்த வருஷத்தோட இரண்டு வயதாகப் போகிறது.இன்னும் திருப்பித் தர முடியவில்லை.சேகரனும் அதை பொருட்படுத்தியிருக்க மாட்டான்.அவனுக்கு அவ்வப்போது சாராயம் குடிக்கும் பழக்கம் இருந்தது. அதைக் குடிக்கும் வரை நல்லவனாக இருப்பவன், குடித்து விட்டால் உலகில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பேசுவான்.

அவள்,‘‘ஏங்க இப்புடிக் குடிச்சு சீரழியறீங்க”ன்னு கேட்டு விட்டால் போயிற்று. ‘‘உங்கப்பனூட்டுலர்ந்து கொண்டு வந்ததயாடி கரைக்கிறேன். வாங்கித் தின்ன பய, வருஷம் மூணாகுது இன்னும் திருப்பித்தர வக்கில்ல..பேச வந்துட்டா பேச்சு..போயி பணத்தக் கேட்டு கையோட வாங்கிட்டு வந்துட்டு அப்புறமா பேசுடி”ன்னு அவளை அடிக்க வருவான். அவன் பலகீனத்தை மறைக்க அவள் பலகீனத்தை தன் பலமாக்கிக் கொண்டான்.

முதலில் எல்லாம் இந்தப் பேச்சும் அடியும் தாங்காமல் ஊருக்கு ஓடி வருவாள். அவள் கஷ்டங்களை சொல்லலாம் என வாய் திறக்கும் முன்பே ‘‘தனம்மா எங்க நானும் வருஷந் தவறாம மாப்புள்ள கடன கட்டிரணும்னு கெடந்து தவிக்கேன்.முடியவே மாட்டேனுது.போன மாசம் உங்க அம்மை காச்சக் கண்டு கெடந்தா. இந்த மாசம் உந்தங்கச்சி வயத்துப் போக்கு கண்டு குளுக்கோஸூ பாட்டில் ஏத்த வேண்டியதாப் போச்சு..எங்க..வர்ற காசெல்லாம் ஆசுபத்திரிக்கு அழுகறதுக்கே சரியாகப் போகுது.மாப்புள்ள தங்கம்.வாயத் தொறந்து பணத்தப் பத்தி இதுவரக்கும் ஒரு வார்த்த கேட்டதில்ல..”சொல்லிவிட்டு கண்களில் அரும்பும் நீரைத் துடைத்துக் கொள்வான்.

தனம் பேச்சற்று செய்வதறியாது கலங்கும் தகப்பனையே பார்த்துக் கொண்டிருப்பாள்.ஆனால் அவள் நினைப்பது போல அது சேகரனை மெச்சி வந்த கண்ணீர் அல்ல என்பது அவளுக்கெங்கே தெரியும். அது அவளுக்காக , அவள் நிலைமையை எண்ணி வந்த துளிகள் தான்.அவள் வந்து சொல்லா விட்டாலும் சேகரன் ஊரிலிருந்து வரும் உறவு சனம் வேலய்யாவிடம்அவன் குடித்து விட்டு பேசாத பேச்செல்லாம் தனலட்சுமியை பேசுவதைக் காதில் போட்டுக் கொண்டே தானே இருக்கிறது.எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்று தனம் வருவதையே நிறுத்திவிட்டு , எப்பவாவது ஒரு நாள் காலை பேருந்தில் வந்து விட்டு, அதே பேருந்தில் மாலை திரும்பி விடுவாள்.

‘‘ஏ… புள்ள தனம்… கருக்கல்லயே கெளம்பிட்ட… எங்காத்தா அப்பன் ஆயியப் பாக்கவா..?” குரல் கேட்டு தன்னைஅறியாமல் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பார்த்தாள். பால்கார கோனார் பால் கறக்கும் குவளையோடு சைக்கிளில் நின்று கொண்டிருந்தார்.‘‘ஆமாண்ணா…” என்றாள் கம்மிய குரலில்.‘‘சொகமாத்தான இருக்காங்க.மேலுக்கு எதுவுமில்லையே…”‘‘இல்லண்ணா… சும்மாதான் போனேன்..” என்ற அவள் சொல் காற்றில் பறக்க , சைக்கிளை மிதித்து விட்டார்.

அவளும் எப்படியோ கேட்காத பேச்செல்லாம் சொரணை கேட்டதனமாய் கேட்டு பொறுத்துக்கொண்டுதான் இருந்தாள். இத்தனைக்கும் அவள் மாமனார், மாமியார் அடுத்த தெருவில்தான் குடி இருந்தார்கள். முதலில் கூட்டாகத்தான் இருந்தார்கள். சேகரன் குடித்து விட்டு வந்து செய்யும் அலப்பறையால், ‘‘ஏண்டா சேகரா.. உங்கிட்ட என்ன இல்லாமயா கெடக்கு. அந்தப் பணத்தத்தான் வுட்டுரேண்டா..” என்று சொல்லவும், ‘‘ஊம்..வுடுவே.. பத்தாயிரம் சல்லிக் காசாத் தெரியுதா உங்களுக்கு..வேலயப் பாத்துட்டு போங்கவே” என்று கத்தவும் , அடுத்த நாளே வேறு குடித்தனம் கிளம்பி விட்டார்கள்.

முதல்நாள் எப்போதும் போல் குடித்து விட்டு வந்தவன், ‘‘ஏண்டி… உங்கப்பனுக்கு பணத்தக் கொடுக்க வக்கில்லன்னா எதுக்குடி மூணப் பெத்துப் போட்டு வச்சுருக்காங்க. பணத்துக்கு ஈடா உம் பொறந்தவள இங்க ஓட்டி விடச் சொல்லுடி.நானே அதயும் மேஞ்சூக்கறேன்”என்று உளறவேதான் தனத்துக்கு‌ ரொம்பக் கோபம் வந்து, ‘‘தூ… நீயும் ஒரு மனுஷனாங்காட்டி..”ன்னு, ‌முதல் பேருந்துலேயே புறப்பட்டு விட்டாள்.அவள் கிளம்பியதே அவனுக்குத் தெரியாமல் போட்ட‌ சரக்கு மயக்கத்தில் உருண்டு கொண்டு இருந்தான்.

தனலட்சுமி கூட செல்லமாக வேலய்யாவிடம் கேட்பாள், ‘‘ஏ அப்பு… ஒரு தனலட்சுமிக்கே தனத்தக் காணும். அப்புறம் எதுக்கு வரிசையா வீர, விஜய லட்சுமியெல்லாம்..?”
‘‘அட, நாம கெட்ட கேட்டுக்கு ஒண்ணே போதும்னுதான் சொன்னேன். இந்தக் கூறு கெட்ட கழுததான் நாளக்கி கொள்ளி போட பய்யன் வேணும்னு வரிசையா பெத்துப் போட்டுட்டா…”
‘‘ஆமா இவரு பெரிய மகாராசா… நாந்தேன் கூறுகெட்டுப் போயிட்டனாக்கும்…அப்ப நல்லாத்தான் உங்கப்பன் மில்லுக்குப் போய்கிட்டு இருந்துச்சு.அஷ்டலட்சுமியே வந்து பொறந்தாலும் வளக்கறதுக்கு தெம்பு இருக்குன்னு..?” என்றவளின் குரல் தழுதழுக்க கண்ணில் நீர் கட்டும்.

மில்லில் வேலை செய்யும் போது நடந்த விபத்தில் கையில் அடிபட்டு லேசாக ஊனமாகி விட, அதற்கு மேல் போகமுடியாமல் ஆடு, கோழி வளர்த்து அரைக்கஞ்சியும், கால் கஞ்சியுமாய் ஜீவனம் செய்து கொண்டிருந்தார்கள். வறுமையைக் கொடுத்த கடவுள், பெண்களுக்கு நல்ல வளமையைக் கொடுத்ததில் தங்கவிக்ரகம் போல இருந்தவர்களை மாப்பிள்ளைகள் தேடி வந்து கட்டிக் கொண்டு போனார்கள்.இன்னும் கடைக்குட்டி விஜயலட்சுமியின் திருமணம் மட்டுமே நின்றது. அவளும் பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள்.

‘‘என்னம்மா… வர்றியா..” என்ற நடத்துனரின் குரல் கேட்டு, சட்டென்று பேருந்தில் ஏறினாள். இறங்கிய போது காலை எட்டு மணிக்கே சூரியன் முதுகில் சுட்டது. முரளியின் தலையில் சேலைத் தலைப்பை மறைவாகப் போட்டுக்கொண்டு நடந்தாள்.வேலிப்படலை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளை பார்த்து..

கழுநீர்த் தண்ணியை ஆடுகளுக்கு ஊற்ற வெளியே வந்த அம்மா அம்சவல்லி, ‘‘ஏ… புள்ள தனம்.. திடுப்புன்னு வந்து நிக்க…தனிச்சா வந்த… மளிக்கக்கடைக்கு போனு பேசியிருந்தா அப்பன சைக்கிள எடுத்துட்டு வரச் சொல்லி இருப்பனுல்ல…”‘‘தங்கம் வாடா ராசா..”என்றபடி முரளியைக் கையில் வாங்கிக் கொண்டவள், ‘‘ஏங்க.. எங்கிருக்கீங்க.. யாரு வந்திருக்கா பாருங்க..”என்று உள் திரும்பி கூவிக் கொண்டே போனாள்.

‘‘யாரு… என்றபடியே வாயில் வேப்பங்குச்சியுடன் வெளியே வந்த வேலய்யன், ‘‘ஏய் தங்கம்… தனம்மா… மொத பஸ்ஸிலயா வந்த… போனு பண்ணிருந்தா சைக்கிள எடுத்தாந்திருப்பனே தாயி… புள்ளையும் தூக்கிட்டு அம்புட்டு தூரம் நடந்தே வந்தியா..”‘‘இது கூட நடக்கமாட்டேனா அப்பு”என்றபடி சிமென்ட் தொட்டித் தண்ணீரில் கைகாலை அலம்பிக்கொண்டே தனம் உள்ளே நுழைந்தாள்.‘‘மாப்புள்ள.. சம்மந்திமாரெல்லாம் சொகந்தானே..?” கேட்டுக் கொண்டே, அந்த கறுப்பு வெடயன புடிச்சாங்க…

மொளகுத் தண்ணி வச்சுக் குடுக்கலாம்.” என்றாள் அம்சவல்லி.‘‘எதுக்கு ஆயி.. மேயற கோழிய அடிக்கற… வேண்டாம் சொம்மா கறிகா பண்ணு போதும்…”ஆமா, அங்க போண்டா கோழிதான சாப்புடுறீங்க. நாட்டுக்கோழி எங்க கெடக்குது.. நீங்க போயி புடிச்சு அடிங்க..”வேலய்யன் கோழியைப் பிடிக்கப் போக, ‘‘அக்கா, டேய் தங்கம்… குட்டிப்பையா..” என்று கத்திக் கொண்டே வந்து கட்டிக் கொண்டாள் விஜயா.‘‘நல்லாருக்கியா‌டி… நல்லாப் படிக்கிறியா..?”

‘‘படிக்கிறேங்க்கா… ஆயி செஞ்சுட்டியா..?”
‘‘ஊம்… சாப்பிடு..” என்று ஒரு தட்டில் ராய் களியையும், கீரைக் கடைசலையும் ஊற்றினாள் அம்சவல்லி.
‘‘அட, ராய்க்களியா..?”
‘‘ஆமா தனம்… மாவுக்கு ஊறப் போடல.உனக்கு வேணா கமலா கடயில மாவு
வாங்கியாரட்டா..?”

‘‘எதுக்கு ஆயி, ராய்க்களி சாப்புட்டு எத்தினி நாளாகுது.அதென்னமோ இவுங்க அப்புனுக்கு களியே ஆகாது .நிதத்துக்கும் புட்டோ, தோசயோ தான். மாவப் பார்த்தாவே ஒமட்டிட்டு வருது.நீ களி மிச்சமிருந்தா எடுத்து வச்சிரு.கோழிக் கொழம்புக்கு நல்லா இருக்கும்…”‘‘ஏண்டி… வராதவ வந்துருக்க… காலைல புட்டு சுட்டு, உச்சிப் பொழுதுக்கு சுடு சோறாக்கலாம்னு இருந்தேன்…”
‘‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ஆயி… எனக்கு இதான் புடிக்கும்..” என்ற தனத்துக்குத் தெரியாதா..?! அங்கே இருந்த நிலமை.அதான் அவள் மனதைப் போலவே வெறுமையாகக் கிடந்தனவே அரிசி சால்கள்.

‘‘அக்கா… போயிட்டு வரேங்கா…இருப்பயில்ல… நா ஓடி வந்தூருவேன்… டேய் தங்கம்” என்று முரளியை கொஞ்சியவளிடம்…‘‘இல்லடி… ஐஞ்சரை மணி பஸ்ஸுக்கு கெளம்பிருவேன்..அதுக்குள்ள வந்துருவியா…” ‘‘வந்துருவங்க்கா. பெசல் கெளாஸ் இருக்கும். ஒரு நா சொல்லிட்டு வரலாம். பை..குட்டிபையா…” என்று மீண்டும் முரளியிடம் கொஞ்சி விட்டு போனவளையே பார்த்தவளுக்கு நேற்றைய சேகரனின் பேச்சு ஞாபகத்துக்கு வந்து வயிறு காந்தத்தான் செய்தது.அடக்கிக் கொண்டு அவள் பின்னோடவே நடந்தாள்.வேலய்யன் கோழி இறக்கைகளை சுடுதண்ணியில் முக்கி பொசித்துக் கொண்டிருந்தான். ‘‘தள்ளு அப்பு… நாஞ் செய்யறேன்” என்றாள்.

‘‘ஆமா… வேகாத வெயில்ல நடந்து வந்திருக்க. சாப்புட்டு செத்த கண்ணசரு ஆத்தா…நா பாத்துக்குறேன்.இதென்ன அம்புட்டுப் பெரிய வேல… ஏழு பேரு செய்ய..?”
‘‘ஏப்பு… எப்பத்தான் பணத்த திருப்புவ…” மனசுக்குள் அடைத்து நின்றதை,வாய் விட்டுக் கேட்க நினைத்து, சொல் எழும்புவதற்குள் வேலிப்படல் திறக்கும் சத்தம் கேட்டது.
‘‘ஏ… புள்ள… தனலட்சுமி… எப்ப வந்த..? ஊருல எல்லாம் சொகந்தானே..?” கேட்டபடியே வந்தார் வேலய்யனின் அண்ணன் பெரியண்ணன்.

‘‘சொகந்தான் பெரியப்பு… அங்க பெரியாயி.. அண்ணமாரு, அண்ணிமாரு எல்லாம் நலந்தானே… குமாருக் குட்டி எப்படி இருக்கான்..?”‘‘சொகந்தான்… அந்தக் குட்டிப்பயதான் அடங்காம குதும்பு பண்ணுதான்…” அவளிடம் திரும்பி சொல்லிக் கொண்டே..‘‘டேய் வேலா… நாஞ் சொன்னது ரோசன பண்ணிப் பாத்தியா… மாப்புள்ள ஊட்டுலேர்ந்து ஆள் மேல் ஆளு அனுப்புதாக..”
‘‘தனம்மா.. அம்மை கிட்ட சொல்லி பெரியப்புக்கு மோரு தரச் சொல்லு..” என்ற வேலய்யன், ‘‘அண்ணே… இதுல ரோசிக்க என்ன இருக்கு..?! புள்ள இப்பதானே பத்தாமொப்பு போகுது.இன்னும் ரெண்டு கிளாஸு முடிக்கட்டும்.அப்புறம் பேசலாம். அதுவுமில்லாம கண்ணாலம்னா சுதாரிக்க வேணாமா..?”‘‘தனம்மா… பாரு இன்னும் வீரூலட்சுமி கடனே கட்டாம முழி பிதுங்குது. அதுக்குள்ள விசயாள பொண்ணுக் கேட்டு தானாவதிக்கு பெரியப்பு வந்துருக்காரு…”என்றான் இவளிடம்.

வந்த அண்ணனை ‘‘கோழி அடிச்சுருக்கு.ஒரு வா கை நனச்சுட்டுப் போன்ணே”என்று வேலய்யன் வற்புறுத்தவே, அவரும் ஆற அமர கதை பேசி சாப்பிட்டுப் போகவும், ‘‘அக்கா போகலியில்ல…” என்று குதூகலித்தபடி விஜயா வரவும் சரியாக இருந்தது. மணியும் ஐந்தாகவே, மனதில் அடைத்தது அடைத்தபடி கிடக்க, தனலட்சுமி ஊருக்குக் கிளம்ப வேண்டியதாகியது.
‘‘ஏ..அக்கா… மாமனையும் கூட்டிக்கிட்டு கண்டிப்பா பொங்கலுக்கு வருவியாம்…”

என்றாள் முரளியைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டே விஜயா.‘‘ஆமா தனம்… மாப்புள்ள வந்து எத்தினி வருஷமாச்சு… அப்பன வந்து கூப்பிடச் சொல்றேன். வந்து ரெண்டு நாளு தங்கிட்டுப் போத்தா..”கண்ணில் நீர் கோர்க்க அம்சவல்லி.‘‘ஆமா, பெரிய மாமன்.. பெரிய மாப்புள்ள கூப்புட்டொன்னி வந்துட்டுத்தான மறுவேல பாப்பாரு… மனதிற்குள் முனகிக்கொண்டே, ‘‘சொல்றம்மா… நல்லாப் படிக்கோணும் விசயா.. நானும், வீரூவும்தான்‌ நம்மூருப் படிப்போட நின்னு போயிட்டோம்.நீயாவது பெரிய படிப்புப்படி. சரி ஆயி.. கெளம்புறேன்…” என்றபடி வேலய்யன் சைக்கிளில் ஏறிக் கொண்டாள்.

சைக்கிளில் போகும் போது கேட்கலாம் என்று நினைத்து, ‘‘அப்பு..” என்றாள் மெதுவாக.மேலக்காத்து விர்ரென்று வீசியதில் அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. இறங்கியபின் பேருந்து வருவதற்குள் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு அமைதியானாள்.நிறுத்தம் என்று எதுவுமில்லை. அங்கே ஒரு மின்சாரக்கம்பமும், யாரோ கோடை காலத்தில் இளநீர் கடை போட்ட குடிசையும்தான் இருந்தது. அந்த இடத்தில் தான் வரும் நான்கு பேருந்தும் நிற்கும்.

‘‘ஏந் தாயி.. மாத்துடுப்பெல்லாம் எடுத்தாந்திருக்கற போல…ஒரு பொழுது இருந்துட்டு நாள கழிச்சு போயிருக்கலாமில்ல…”‘‘இல்ல அப்பு… இவங்கப்பன் சோத்துக்கு அல்லாடும். அவங்க அப்பனாத்தா வூட்டுக்கும் போகாது.இவம் சேலய நனைச்சுட்டா என்ன பண்றதுன்னு தூணி எடுத்தாந்தேன்..” என்றவள் பணத்தைப் பற்றிக் கேட்கலாம் என்று வாய் திறக்கும் போது, ‘‘தாயி… நானும் வருஷந்தவறாம குடுத்துரணும்… குடுத்துரணும்னு நெஞ்சுக்குள்ளார அடிச்சுகிட்டேதான் கெடக்கேன். எங்க வருஷம் முழுசா மூணாயும் முடியல..”சொல்லிக் கொண்டே கால்சட்டைப் பையில் கை விட்டவன் ஒரு பாலிதீன் கவரை வெளியே எடுத்தான்.

‘‘கண்ணு.. எப்புடியோ இங்க புரட்டி,அங்க புரட்டி, அதக் கொறச்சு இதக் கொறச்சு ஒரு‌மூவாயிரம் தேத்திப்புட்டேன். கொண்டு போயி மாப்புள்ளகிட்டக் கொடுத்து பாக்கிப் பணத்தயும் வெரசாத் திருப்பிர்றேன்னு சொல்லி மன்னிக்க சொன்னேன்னு சொல்லு தாயி..” என்றபடி நடுங்கும் கைகளில் பணத்தை நீட்டினான்.அந்த நடுங்கும் கைகளில் உலகில் உள்ள அத்தனை ஏழை தகப்பன்களின் துயரை தனலட்சுமியும், உலகில் உள்ள திருமணமான அத்தனை ஏழை வீட்டுப் பெண்பிள்ளைகளின் துக்கத்தை தனலட்சுமியின் கண்களில் வேலய்யனும் ஒரு சேரக் கண்டனர் அந்த கணத்தில்..

அவனையே அவன் நடுங்கும் கைகளையே பார்த்தவள், ‘‘ஏனப்பு… இப்ப இந்த ரூபாக்கு என்ன கொறஞ்சு போச்சாம்… அங்க கெடக்கு வுடு… அப்புறமா பாத்துக்கலாம்.இத வச்சு அம்மைக்கு, விசயாக்கு எல்லாம் பொங்குலுக்குத் துணிமணி வாங்கிக்குடு.உனக்கு நல்லதா வேட்டி சட்டை வாங்கிக்க…”என்றபடி நீட்டிய பணத்தை வாங்கி மீண்டும் அவன் சட்டைப்பையிலேயே வைத்தாள்.
‘‘அதெல்லாம் …” என்று ஏதோ சொல்ல வந்த வேலய்யனின் குரல் கேட்காத மாதிரி திரும்பிக் கொண்ட தனலட்சுமியின் கண்களில் கோடிட்டது கண்ணீர் கரை.தூரத்தில் நீள ஒலிப்பானுடன் வந்து கொண்டிருந்தது அவள் செல்லும் பேருந்து.

தொகுப்பு: விஜி முருகநாதன்

The post சிறுகதை-கடன் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dhanalakshmi ,
× RELATED குதிகால் வலி