×

தென் ஆப்பிரிக்காவுடன் இன்று 2வது டி 20; இந்திய அணியின் பிளேயிங் லெவன் யார், யார்?: வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பில்லை

டர்பன்: தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது. டர்பன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டி மழையால், டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2வது டி20 போட்டி இன்று இரவு நடக்க உள்ளது. இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டி20 உலகக்கோப்பை தொடரில் தயாராவதற்கு இன்னும் 5 போட்டிகளே இருப்பதால், ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் கூட்டணி களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடி 223 ரன்கள் குவித்திருந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட் பெஞ்ச் செய்யப்படவே வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் 3வது இடத்தில் அனுபவ வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்படலாம். வழக்கம் போல் 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், 5வது இடத்தில் ரிங்கு சிங், 6வது இடத்தில் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா, 7வது இடத்தில் துணை கேப்டன் ஜடேஜா களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மற்றொரு ஸ்பின்னராக ரவி பிஷ்னோய் மற்றும் குல்தீப் யாதவ் இருவரில் ஃபார்ம் அடிப்படையில் பிஷ்னோய் விளையாட வாய்ப்புள்ளது. வேகப்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை முகேஷ்குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது. ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணிக்கு தொடரை வெல்லும் வாய்ப்பு என்பதால், ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மழை, டாஸ் இரண்டு சவால்கள்: 2வது டி20 போட்டி நடைபெற உள்ள கேபெர்ஹா நகரில் போட்டிக்கு முன்னதாக மழை பெய்வது உறுதி என வானிலை அறிக்கை தெரிவித்து உள்ளது. அதே சமயம், போட்டி துவங்கும் நேரத்துக்கு பின்னர் மழை பெய்ய வாய்ப்பு குறைவு எனவும் தெரிவித்துள்ளதால் போட்டி தாமதமாக துவங்கினாலும் முழுமையாக நடைபெறும் வாய்ப்பு உள்ளது. மழை பெய்தால் பிட்ச்சின் தன்மை நிச்சயம் வேகப் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும்.

அது மட்டுமின்றி போட்டி நடக்க உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானம் 2வது பாதியில் ஸ்பின் மற்றும் சீம் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும். அதனால், இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யவே அணிகள் விரும்பும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்வதே சரியான முடிவாகவும் இருக்கும். மழை மற்றும் டாஸ் இந்தப் போட்டியில் பெரும் பங்கு வகிக்க இருப்பதால், இந்திய அணிக்கு இது இரண்டுமே சவாலாக இருக்கும். இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்றால், இந்திய அணி பாதி கிணறை தாண்டிவிட்டதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

The post தென் ஆப்பிரிக்காவுடன் இன்று 2வது டி 20; இந்திய அணியின் பிளேயிங் லெவன் யார், யார்?: வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பில்லை appeared first on Dinakaran.

Tags : South Africa ,India ,Washington Sundar ,Durban ,Washington ,Sundar ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...