×

ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்துவது எப்படி?வேளாண் அதிகாரி விளக்கம்

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் இதுவரை 4,250 ஹெக்டருக்கு மேல் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கழிச்சான்கோட்டை, சொக்கனாவூர், கன்னியாகுறிச்சி ஆகிய கிராமங்களில் பின்பட்ட நடவு செய்துள்ள நெல் பயிரில் தொடர் மழையினாலும், காற்றின் ஈரப்பதம் 80 சதத்திற்கு அதிகமுள்ள சூழலிலும் ஏற்பட்ட தட்பவெப்ப மாறுபாட்டில் ஆனைக்கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. நெல் நடவு செய்த 30 மற்றும் 45 நாட்களில் புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும். பாதிக்கப்பட்ட தூர்களில் கதிர்கள் வராது. இதனால் விவசாயிகளுக்கு அதிக மகசூல் இழப்பு ஏற்படும். களிச்சான்கோட்டையை சேர்ந்த அரவிந்த் மற்றும் சொக்கனாவூர் ராஜேந்திரன் போன்ற விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி மற்றும் வேளாண் உதவி அலுவலர் பாபி ஆகியோர் விவசாயிகளின் வயல்களில் ஆனை கொம்பன் ஈயின் தாக்குதல் இருப்பதை ஆய்வு செய்தனர். அதன்பின் வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி, மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்காக ஆனைக்கொம்பன் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி கூறுகையில்,நெல் வயலின் வரப்புகளில் களைகள் இன்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பூச்சி அதிக அளவில் தூர்களுக்கு அருகிலும் தூய்மையற்ற களை மிகுந்த வரப்புகளிலும் அதிகம் காணப்படும். எனவே வரப்புகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் தழைச்சத்து உரமான யூரியாவை தவிர்த்துவிட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவிலான பொட்டாஷ் உரத்தை இட வேண்டும். வயலில் அதிகமாக ஊசித்தட்டான், குளவி, சிலந்தி இருக்கும்பட்சத்தில் சமநிலை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து பூச்சி தாக்குதலை கண்காணிக்கவேண்டும். பிளாட்டிகேஷ்டர் முட்டை ஒட்டுண்ணிகளை விடுவதன் மூலம் புழுக்களை கட்டுப்படுத்த முடியும். 10 சதவீதத்திற்கு மேல் ஆனைக்கொம்பு ஈயின் தாக்குதல் தென்பட்டால் பிப்ரோனில் குருணை மருந்து எனில் ஏக்கருக்கு 4 கிலோவும் அல்லது பிப்ரோனில் 5ஈசி மருந்து ஏக்கருக்கு 500 மில்லி மருந்தினை 20 லிட்டர் நீரில் கலந்து கை தெளிப்பானில் ஒரு டேங்குக்கு ஒரு லிட்டர் கரைசல் 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து தூரில்படுமாறு தெளிக்க வேண்டும். மாவுக்கு 7 டேங்கும், ஏக்கருக்கு 21டேங்கும் தெளித்து கட்டுப்படுத்தலாம். எனவே சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இளம் பயிரிலிருந்து 70 நாள் வரையிலான பயிர்களில் ஆனைகொம்புஈயின் தாக்குதலை கண்காணித்து மேற்கண்ட கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி பயிர்களை காத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை அணுகவும் என்றார்….

The post ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்துவது எப்படி?வேளாண் அதிகாரி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Pattukottai ,Madukkur ,Dinakaran ,
× RELATED மதுக்கூர் அருகே அத்திவெட்டியில் வேளாண் கண்காட்சி