×

அத்தனாவூரில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சேதமடைந்த பொது கழிப்பிடம் சீரமைக்கப்படுமா?

*சுற்றுலாப் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஏலகிரி : அத்தனாவூரில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சேதமடைந்த பொது கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழைகளின் ஊட்டி என கருதப்படும் ஏலகிரி மலைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இம்மலைக்கு வந்து பொழுதுபோக்கி மகிழ்ந்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பொது இடங்களில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், பொது இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஏலகிரி மலையில் முக்கிய பேருந்து நிறுத்தமாக அத்தனாவூர் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் இந்தப் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் மிகவும் சேதம் அடைந்த நிலையில் கழிப்பிடம் ஒன்று அமைந்துள்ளது. இதற்கு முன்பு இதனை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும், கடை பணியாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது சேதம் அடைந்த நிலையில், பராமரிப்பின்றி மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கழிப்பிடமின்றி விடுமுறை நாட்களில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கழிப்பிடத்தின் உள் சாக்கடைக்கழிவு தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிப்பிடத்தை சீரமைத்து தர வேண்டுமெனவும், கழிவு நீரை அகற்றி நோய் தொற்று ஏற்படாதவாறு சீரமைக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏலகிரி மலை படகு இல்ல சாலையில் இருந்த கழிப்பிடம் இடிக்கப்பட்ட நிலையில், இதனையும் இடிக்க திட்டம் உள்ளதாக ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏலகிரி மலையில் வெளிப்புறத்தில் இரண்டு கழிப்பிடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post அத்தனாவூரில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சேதமடைந்த பொது கழிப்பிடம் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Athanaur ,Elgiri ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...