×

குளங்கள், கிணறுகள் நிரம்பியதால் நெசவு கைத்தறி குழிகளில் நீரூற்று

*பணிகளை நிறுத்தியதால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

அன்னூர் : கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் மூக்கனூர்,குன்னியூர்,பூலுவபாளையம்,புள்ளாமடை, எல்லப்பாளையம் பகுதியில் 500 குடும்பங்கள் கைத்தறி நெசவு செய்து வருகின்றனர். நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த குடும்பங்கள் நெசவுத் தொழிலையே நம்பி இருக்கின்றன.சிறுமுகை,சக்தி,புளியம்பட்டி பகுதியில் இருந்து கோராபட்டு, ஜரிகை ஆகியவற்றை வாங்கி கூலிக்கு நெசவு செய்து வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களாக அன்னூர் வட்டாரத்தில் கன மழை பெய்து வருகிறது.இந்த மழையால் அன்னூர், பூலுவபாளையம், கஞ்சப்பள்ளி குளங்களில் 90 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.50 சதவீத குளங்களில் தண்ணீர் நிறையும் அளவுக்கு வந்துவிட்டது. பெரும்பாலான கிணறுகளில் நீர்மட்டம் மேல் தரைமட்டம் வரை வந்துவிட்டது. இதையடுத்து மூக்கனூர்,குன்னியூர், கைகாட்டி,புள்ளாமடை பகுதியில் உள்ள கைத்தறி நெசவு நெய்வதற்காக தோண்டப்பட்ட இரண்டரை அடி குழிகளில் தண்ணீர் ஊற்றெடுத்து நிற்கிறது.

வழக்கமாக நெசவாளர்கள் தறி குழியில் அமர்ந்து நெசவு செய்வது வழக்கம்.தற்போது தண்ணீர் நிற்பதால் நெசவு செய்ய முடியவில்லை. தண்ணீரை எடுத்து வெளியே ஊற்றினாலும், சிறிது நேரத்தில் மீண்டும் தண்ணீர் ஊற்று வந்து விடுகிறது. இதனால் ஒரு வாரமாக நூற்றுக்கணக்கான நெசவாளர்கள் தறி நெய்ய முடியாமல் தங்கள் வருமானத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில்: ஒரு சேலை நெய்வதற்கு இரண்டரை நாட்கள் ஆகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று சேலைகள் நெய்து வந்தோம்.கடந்த ஒரு வாரமாக சேலை நெய்ய முடியாததால் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளோம்.இந்த நீரூற்று எப்போது நிற்கும்.

எப்போது நெசவு செய்ய முடியும் என்று தெரியவில்லை.இதற்கு நிரந்தர தீர்வாக தரை மட்டத்துக்கு மேலே ஸ்டேண்ட் தறி அமைக்க வேண்டும்.அதற்கு ஒரு தறிக்கு ரூ.20 ஆயிரம் செலவாகும் அப்போதுதான் மீண்டும் நெசவு செய்ய முடியும். எனவே தமிழக அரசு குழித்தறி வைத்துள்ளவர்களுக்கு ஸ்டாண்ட் கைத்தறி அமைக்க உதவி செய்ய வேண்டும். தலா இருபதாயிரம் ஒதுக்க வேண்டும். தற்போது தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கைத்தறி நெசவை கைவிட்டு விட்டு வேறு கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு நெசவாளர்கள் தெரிவித்தனர்.

The post குளங்கள், கிணறுகள் நிரம்பியதால் நெசவு கைத்தறி குழிகளில் நீரூற்று appeared first on Dinakaran.

Tags : Annur ,Mookkanur ,Kunniyur ,Pooluvapalayam ,Pullamadai ,Ellapalayam ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...