×

ஆரணி காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த 20 பைக்குகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைப்பு

*தடயங்களை அழிக்க முயற்சியா? போலீஸ் விசாரணை

ஆரணி : ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த 20 பைக்குகள் மர்ம ஆசாமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தடயங்களை அழிக்க நடந்த முயற்சியா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்டு 98 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனை நடத்தியபோது பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட மற்றும் வழிப்பறி, கள்ளச்சாராயம், விபத்து, கொலை, திருட்டு போன்ற சம்பவங்களில் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்து காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, பாதுகாப்பு பணிகளுக்காக ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் சென்றிருந்தனர். கடந்த 9ம் தேதி இரவு பெண் காவலர் ஒருவர் மட்டுமே காவல் நிலையத்தில் பணியில் இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. மேலும், பைக்குகளின் பெட்ரோல் டேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்தன. இந்த சத்தம் கேட்டு பெண் காவலர் அலறியடித்து ஓடிவந்து பார்த்தபோது பைக்குகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், 20க்கும் மேற்பட்ட பைக்குகள் தீயில் கருகி சேதமடைந்தன.

இதையடுத்து, தீயில் கருகிய பைக்குகளை டிஎஸ்பி ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, தாலுகா எஸ்எஸ்ஐ ஜெயபால் கொடுத்த புகாரின்பேரில் ஆரணி டவுன் போலீசில் வழக்கு பதிவு செய்தனர்.காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த பைக்குகள் கொலை, திருட்டு, மணல் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை.

எனவே, மணல் கடத்தல் மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய மர்ம ஆசாமிகள் தடயங்கள் மற்றும் சாட்சிகளை அழிக்க பைக்குகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்களா? தீ வைத்த மர்ம நபர்கள் யார்? தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீ விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காவல் நிலைய பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post ஆரணி காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த 20 பைக்குகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Arani Police Station ,Arani ,Arani taluka police station ,Dinakaran ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு