×

காண்டாமிருக வண்டு தாக்குதலில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது எப்படி? பொன்னமராவதி வேளாண். உதவி இயக்குனர் ஆலோசனை

பொன்னமராவதி : தென்னை மரங்களை கண்டாமிருக வண்டு தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி விவசாயிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:மழைக்காலத்தில் தென்னைமரங்களில் காண்டாமிருக வண்டு பாதிப்பு காணப்படலாம். வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்து பாகத்தில் துளையிட்டு மரத்தின் உள்ளே சென்று வளரும் மொட்டுப் பகுதியை தின்று விடுகிறது. தாக்கப்பட்ட பாகம் போக எஞ்சிய குருத்து விரியும்போது தென்னை மட்டை முக்கோண வடிவில் சீராக கத்தரியால் வெட்டியது போல் தோற்றமளிக்கும். இவ்வண்டு தாக்குவதால் 10- 15 சதவீதம் மகசூல் குறையும். மொட்டுப் பகுதியை தின்றபின் மீதியாகும் மரச் சக்கையை உள்ளே சென்ற துவாரம் மூலம் அடிமட்டையின் இடுக்குகளிலிருந்து வெளியே தள்ளுகிறது.கீழ்க்கண்ட முறையில் இதனை கட்டுப்படுத்தலாம். தாக்கப்பட்ட மடிந்துபோன மரங்களை தோப்பில் இருந்து அகற்றி அழித்துவிடவேண்டும். தோப்பை சுத்தமாக வைக்க வேண்டும். கம்போஸ்ட் மற்றும் உர குழியிலிருந்து காண்டாமிருக வண்டின் முட்டைகள் புழுக்கள் கூட்டுப் புழுக்களை பொறுக்கி அழிக்க வேண்டும். வண்டின் தாக்குதல் அதிகரிக்கும்போது மரத்தின் குருத்து பாகத்தில் வளர்ந்த வண்டு உள்ளதா என்று பார்த்து இருந்தால் கம்பி அல்லது சுளுக்கியால் அதை குத்தி வெளியில் எடுத்து கொன்று விட வேண்டும். நடுக்குருத்து பாகத்தில் மட்டை இடுக்குகளில் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு மருந்தினை இடுவதன் மூலம் வண்டின் தாக்கத்தை தடுக்கலாம். செவிடால் 8(குருணைகள்) 25 கிராம் மற்றும் மணல் கலவையை மட்டை இடுக்குகளில் ஆண்டிற்கு மூன்று முறை அதாவது ஏப்ரல்-மே, செப்டம்பர்- அக்டோபர் மற்றும் டிசம்பர்-ஜனவரி போன்ற பருவங்களில் இடலாம். 10- 15 கிராம் அளவுள்ள அந்து உருண்டைகளை இட்டு மணலால் மூடவும். 45 நாட்களுக்கு ஒரு முறை இளம் நாற்றங்காலுக்கு மட்டை இடுக்குகளில் வைக்கவும். 5 கிராம் 10 கிராம் போரேட் மருந்தினை துளைகளுடன் கூடிய பொட்டலமாக எடுத்து ஆறு மாத இடைவெளியில் ஆண்டிற்கு ஒரு முறை வைக்கவும்.ரினோலியூர் எனும் இனக்கவர்ச்சிப் பொறியினை ஹெக்டேருக்கு 5 என்ற வீதத்தில் வைக்கவும். மெட்டாரைசியம் அனிசொப்லியே என்னும் பூஞ்சினை 250 மில்லி 750 மில்லி நீர் சேர்த்து எருக்குழியில் தெளிப்பதால் வண்டுகளின் இளம் புழுக்களை அழிக்கலாம். ஒரு மண் பானையில் 5 லிட்டர் நீருடன் ஒரு கிலோ கிராம் ஆமணக்குப் புண்ணாக்கு சேர;ந்த கலவையை தோப்பில் வைத்தும் வண்டுகளை கவரலாம்.வேப்பங்கொட்டையை 1: 2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் நடுக்குருத்தில் மூன்று மட்டை இடுக்குகளில் வைத்தும் தென்னை மரங்களை காண்டாமிருகம் வண்டு பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம் என பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி ஆலோசனை கூறியுள்ளார்….

The post காண்டாமிருக வண்டு தாக்குதலில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது எப்படி? பொன்னமராவதி வேளாண். உதவி இயக்குனர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Ponnamarawati Agriculture ,Bonnamarawati ,Ponnamarawati ,Shivarani ,
× RELATED பொன்னமராவதி அருகே நெய்வேலியில் புதிய கலையரங்கம்