×

சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பங்கி தொடங்கி ஜாதி மல்லி வரை ரக ரகமாய்… வித விதமாய்… பூத்துக்குலுங்கும் பூக்கள்

*ஐயப்ப, முருக பக்தர்கள் சீசனால் தேவை அதிகரிப்பு

*அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னமனூர் : ஐயப்ப, முருக பக்தர்கள் சீசனால் சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு விரதம் இருக்க தொடங்குவர். அதனால் கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் ஆன்மிக மாதங்களாக கருத்தப்படுகிறது. அதே போல் மார்கழி மாதத்தில் பழநி முருகன் கோயிலுக்கும் பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

இதனால் அதனால் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் மாலை அணிந்து தங்களின் குடும்ப சூழல்கள் உடல்நலம் ஆரோக்கியம் பெறவும், மன அமைதி கிடைக்கவும் விரதம் தொடங்கி தொடர்ந்து 48 நாள் முதல் 90 நாட்கள் வரையிலுமே கடைப்பிடிக்கின்றனர்.இதனால் பல்வேறு கோயில்களுக்கும் பக்தர்கள் சுவாமிகளுக்கு பூஜை செய்து வழிபடுவதற்குக்கு உட்பட பூக்களின் தேவை அளவிற்கு வழக்கத்தை காட்டிலும் அதிகமாக தேவைப்படுகிறது.

இது போன்று இந்த மூன்று மாதங்களில் பூக்கள் விலையில் எப்போதும் ஏறுமுகமாகவே இருப்பதால் விவசாயிகளும் கவனத்துடன் பூக்கள் கூடுதலாக விளைவிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் இந்த மூன்று மாதங்களில் பூக்களை அறுவடை செய்வதால் விவசாயிகள் ஓரளவிற்கு பொருளாதார நெருக்கடியில் தப்புகின்றனர்.

இதற்காக தேனி மாவட்டத்தில் அனைத்து வகையான பூக்களையும் ஒருங்கே பல நூற்றுக்கணக்கில் தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து பூக்கள் உற்பத்தியில் சிரத்தையுடன் உற்பத்தி செய்து வருகின்றனர். அதற்காக சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி, பூலாநந்தபுரம், கோயில்பட்டி, வேப்பம்பட்டி, சமத்து வபுரம், அய்யம்பட்டி, பூமலைக்குண்டு, கோட்டூர், தே.சிந்தலைச்சேரி, உப்புக்கோட்டை, பாலார்பட்டி, போடேந்திரபுரம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து மல்லிகை, ஜாதி பூ, மெட்ராஸ் மல்லி, செண்டுப்பூ, பன்னீர் ரோஸ், சாதா ரோஸ், செவ்வந்தி, சம்பங்கி, சூரியகாந்தி என ரக ரகமாய், வித விதமாய் பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன.

சுமார் 1500 முதல் 2000 ஏக்கர் வரை இந்த பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. மல்லிகையை பொறுத்தவரை ஒரு முறை பயிரிட்டு முறையாக பராமரித்தால் 7 முதல் 12 ஆண்டுகள் வரை பயன்கொடுக்கும். கனகாம்பரம், முல்லை போன்றவையும் இதே ரகம் தான். அதே போல் டீ ரோஸ், பன்னீர் ரோஸ் போன்றவை ஆறு மாதங்கள் பலன் கொடுக்க கூடியவை. சுமார் ஒரு ஏக்கருக்கு 1000 செடிகள் நடுகின்றனர். பூக்களை பறிக்கும் ஆள் கூலி, மருந்து தெளிக்கும் பணி என தோராயமாக 10 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். தினந்தோறும் இரவு 1 மணிக்கு மேல் தொழிலாளர்கள் பூந்தோட்டத்திற்குள் பறிக்க துவங்கி பூக்கள் உதிர்ந்து விடாமல் காலை 4 மணிக்குள் அறுவடை செய்து மூடைகளாக கட்டி முடிப்பார்கள்.

தேனி மாவட்டத்தில் பூக்களுக்கு தனி சந்தையாக சீலையம்பட்டியில் சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தைக்கு கேரளா மற்றும் தமிழக வியாபாரிகள் அதிகாலையில் இங்கு சங்கமித்து பூக்களை ஏலத்தில் எடுத்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்.தற்போது கோயில் சீசன் துவங்கியதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மல்லிகை கிலோ ரூ.2,000, ஜாதிப்பூ ரூ.600, மெட்ராஸ்மல்லி ரூ.700, செண்டுப்பூ ரூ.100, பன்னீர் ரோஸ் ரூ.90, ரோஜா ரூ.80, செவ்வந்தி ரூ.70, சம்பங்கி ரூ.80 என விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் இந்தப் பூக்கள் குறைந்த விலைக்கு விற்பனையானது. குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் சீசன் காரணமாக சீலையம்பட்டி சந்தையில் கடந்த ஒரு மாத மாக பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சந்தையில் சராசரி காலங்களில் தினமும் 5 டன் முதல் 30 டன் வரையில் சந்தைக்கு விற்பனைக்கு வந்து சேரும். தற்போது வரத்து குறைவின் காரணமாக ஆன்மீக சீஸன் பீக்கில் இருப்பதால் விலை உச்சத்தை தொட்டு தாண்டி வருவதால் 10 டன்னாகவும் குறைந்துள்ளது.

இது குறித்து வியாபாரி முனிராஜ் கூறியதாவது, ‘‘நிலக்கோட்டை பகுதியில் விளையும் மல்லிகைப்பூக்களுக்கு இணையாக, இங்கு விளையும் மல்லிகைப்பூ அளவில் பெரியதாக இருப்பதோடு, மனமும் அதிகம். இதற்காகவே சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் மல்லிகை பூக்களுக்கு டிமாண்ட் என்பது சற்று அதிகம். மேலும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சீலையம்பட்டியிலிருந்து தான் பூக்கள் அனுப்பப்படுகின்றன. வருடத்தில் மற்ற மாதங்கள் சிரமமாக இருந்தாலும், ஐயப்ப ,முருக பக்தர்கள் சீசன்களான கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் மட்டும் எங்களுக்கு கை கொடுக்கின்றன. பூக்களும் நல்ல விலைக்கு விற்பனையாகிறது’’ என்றார்.

The post சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பங்கி தொடங்கி ஜாதி மல்லி வரை ரக ரகமாய்… வித விதமாய்… பூத்துக்குலுங்கும் பூக்கள் appeared first on Dinakaran.

Tags : Sambangi ,Jati Malli ,Chinnamanur ,Ayyappa ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்