×

குறைந்த ஊதியம் வழங்கும் கூடலூர் நகராட்சி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை

ஊட்டி : தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தளவு ஊதியம் வழங்கி வரும் கூடலூர் நகராட்சி தனியார் ஒப்பந்ததாரர் குறித்து விசாரணை மேற்கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தற்காலிக தூய்ைம பணியாளர்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கூடலூர் நகராட்சியில், தனியார் ஒப்பந்ததாரரிடம் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தளவே ஊதியம் வழங்குவதாலும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களை பணிக்கு வர வேண்டாம் எனக் கூறி வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை கூடலூர் நகராட்சியில் பணியாற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.தொடர்ந்து, கூடலூர் நகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் மாவட்ட கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

2017ம்‌ ஆண்டு அதிமுக ஆட்சின் போது, தனியாருக்கு தூய்மை பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அப்போது கூடலூர் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த தூய்மை பணிக்கான ஒப்பந்த பணி எடுத்தார்‌. அவர்‌, ஒரு சில நபர்களை மட்டுமே தூய்மை பணியாளர்கள்‌ என்று கூறி எங்களுக்கு ஒரு சிறிய தொகையை ஊதியம்‌ என்று கூறி கொடுத்து வந்தார்‌.

அவர்‌ கொடுக்கும் ஊதியம் மிகவும் குறைவாகவே உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம்‌ குறைவு என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டார். எங்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும்‌ நாங்களும்‌ அந்த தொகையை பெற்று கொண்டு எந்தவித பாதுகாப்பு உபகரணமும்‌ இல்லாமல்‌ பணியாற்றி வந்தோம்‌.

இதற்கு முன் இருந்த மாவட்ட கலெக்டரால் தூய்மை பணியாளர்களின்‌ குறைதீர்ப்பு கூட்டத்தில்‌ எங்களுக்கு அரசு செய்த நற்செயல்‌ பற்றி எடுத்து கூறி எங்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்‌. அப்போது தான்‌ எங்களுக்கு தெரிந்தது ஒரு தூய்மை பணியாளரின்‌ தினக்‌கூலி ரூ.656‌ என்று. ஆனால்,‌ எங்களுக்கு வழங்கப்பட்டது வெறும்‌ ரூ.300 மட்டுமே. மேலும், அதிக அளவிலான பணியாளர்களை கொண்டு தூய்மை பணி செய்வதாக கூறி பாதிக்கும்‌ குறைவான நபர்களையே பணியில்‌ அமர்த்தி பகுதி ஊதியம்‌ கொடுத்து பலமடங்கு பணத்தை சேர்த்துள்ளார்‌.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்ட போது நாங்கள்‌ பல வழிகளிலும்‌ போராட்டம்‌ நடத்தினோம்.

ஆனால், எங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக கூறி சமாதானம் செய்து வைத்தார். மேலும், தற்போது பல வருடங்களாக நாங்கள்‌ பணியில்‌ ஈடுப்பட்டு வந்தாலும்‌ புதிய பணியாளர்களாக தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவினை சமர்பிக்குமாறு, அவர் கூறி வருகிறார்‌. மேலும்,‌ அவருக்கு எதிராக போராட்டம்‌ நடத்திய காரணத்தால், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பணி செய்ய வேண்டும் என வற்புறுத்தி வருகிறார்.

மேலும், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வரக்கூடாது எனவும் கூறி வருகிறார். சில சமயங்களில் இரவு நேரங்களிலும் பணி செய்யக் கூறி வற்புறுத்தி வருகிறார். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு எங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

The post குறைந்த ஊதியம் வழங்கும் கூடலூர் நகராட்சி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Ooty ,Cuddalore Municipality ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை