×

மரக்காணம் பேரூராட்சியில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்

மரக்காணம் : மரக்காணம் பேரூராட்சியில் பல வளைவுகளுடன் ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மரக்
காணம்-புதுவை சாலை, மரக்காணம்-திண்டிவனம் சாலை, சன்னதி வீதி ஆகிய பிரதான சாலைகள் உள்ளது. இங்கு பருவ மழை காலங்களில் சாலைகளில் பல இடங்களில் மழைநீர் குட்டைகள் போல் தேங்கி நிற்கும். இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவது வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மரக்காணம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போதைய அரசு முதல் கட்டமாக சன்னதி வீதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணியை துவங்க நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே இப்பணியை துவங்கினர்.

ஆனால் இதுவரையில் பணியை முறையாக முடிக்கவில்லை. மேலும் இந்த சாலையில் ஒரே நேர் பாதையில் பாதாள சாக்கடை அமைத்தால் மட்டுமே மழைக்காலத்தில் செல்லும் அதிகப்படியான தண்ணீரானது உடனடியாக வெளியில் செல்ல முடியும். ஆனால் இங்கு இந்த பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் ஒரு சில வணிகர்கள் மற்றும் தனி நபரின் வீடுகளுக்கு அருகில் நேர் பாதையில் பாதாள சாக்கடையை அமைக்காமல் ஏதோ காரணத்தினால் பல வளைவுகளாக இந்த பணியை செய்து வருவதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.

இதுபோல் வளைவுகளுடன் பாதாள சாக்கடை அமைத்தால் தண்ணீர் வெளியாகாமல் சாக்கடையிலேயே தேங்கி நிற்கும் நிலை உண்டாகும். இதனால் சாக்கடையில் இருந்து துர்நாற்றம் வீசும் என்பதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடும் உண்டாகும். மேலும் அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களையும் தாக்கும். இதன் காரணமாக பொதுமக்களுக்கு பல நோய்களும் உண்டாகக்கூடும். எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி மரக்காணம் பேரூராட்சியில் பல வளைவுகளுடன் அமைத்து வரும் பாதாள சாக்கடையை இனிமேலாவது நீர்ப்பாதையில் அமைத்து ஆமை வேகத்தில் நடைபெறும் இப்பணியை விரைவாக முடிக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மரக்காணம் பேரூராட்சியில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Tags : Aami ,Marakanam ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எதிரொலி...