×

ஆரணி அருகே அரையாளம் கிராமத்தில் வேளாங்கண்ணி மாதா சிலை உடைப்பு

*போலீஸ் விசாரணை

ஆரணி : ஆரணி அருகே வேளாங்கண்ணி மாதா சிலை மர்ம ஆசாமிகளால் உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி(67), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் ஆரணி- தேவிகாபுரம் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வேளாங்கண்ணி மாதா சிலை வைத்து, கெபி அமைத்துள்ளார். அதனை கடந்த 7 ஆண்டுகளாக அரையாளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிறிஸ்துவர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள், மாதா சிலையை சுற்றி இருந்த கண்ணாடிகளை கல்லால் உடைத்துள்ளனர். மேலும், மாதா சிலையின் தலை மற்றும் கையில் இருந்த குழந்தை இயேசுவின் தலையை துண்டு, துண்டாக உடைத்து வீசி சென்றுள்ளனர்.

நேற்று காலை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொன்னுசாமி இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், அந்த சிலையை உடைத்து சென்ற மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மர்ம ஆசாமிகளால் மாதா சிலை உடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆரணி அருகே அரையாளம் கிராமத்தில் வேளாங்கண்ணி மாதா சிலை உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Velankanni Mata ,Ariyalam ,Arani ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு