×

திருநெடுந்தாண்டகத்துடன் இன்று துவக்கம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா: 23ல் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி: 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (12ம்தேதி) இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையொட்டி இரவு 7 மணிக்கு கர்ப்பகிருஹத்தியில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பமாகிறது. நாளை (13ம் தேதி) பகல்பத்து (திருமொழி) உற்சவம் துவங்கிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் முதல் மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும்.

இதேபோல் பகல் பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல் பத்து உற்சவத்தின் 10 நாளான வரும் 22ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் சேவை சாதிப்பார். 23ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுவார். அப்போது நம்பெருமாள் ரத்தின அங்கியில் அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வர்.

சொர்க்கவாசல் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சொர்க்கவாசல் திறப்பு தினமான 23ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுவார். ராப்பத்து 7ம் திருநாளான 29ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8ம் திருநாளான 30ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜன.1ம் ேததி தீர்த்தவாரியும், 2ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.

The post திருநெடுந்தாண்டகத்துடன் இன்று துவக்கம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா: 23ல் சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi Festival ,Srirangam ,Ranganatha ,Temple ,Tirunedundantakam ,of the Gate of Heaven ,Trichy ,Srirangam Ranganatha Temple ,Ranganathar ,Tirunedundantakam: Opening of the Gate of Heaven ,23rd ,
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்...