×

நசரத்பேட்டையில் வடியாத மழை வெள்ளம் படகு மூலம் பள்ளி சென்ற மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து, சாலைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால், புறநகர் பகுதிகளில் இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது.  அந்த வகையில், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகரில், வீடுகளை சுற்றிலும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால், இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், புயல் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமான கடந்த 4ம்தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள், நேற்று முதல் திறக்கப்பட்டன.

நசரத்பேட்டை யமுனா நகர் பகுதியில் தரைதளத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் இன்னும் வடியாததால், மாடியில் தஞ்சமடைந்துள்ள மக்கள், தங்களது குழந்தைகளை தயார் செய்து ஏணி மூலம் கீழே இறக்கி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட படகுகள் மூலம் பள்ளிக்கு அனுப்பி விட்டனர். மீண்டும் அதே படகில் மாலையில் வீடு திருப்பினர். நசரத்பேட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில், பழவேற்காடு பகுதியில் இருந்து படகுகள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் பேருந்து சர்வீஸ் போல், தற்போது இப்பகுதியில் வடியாத மழை நீரால், படகு சர்வீஸ் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இப்பகுதியின் அருகே செம்பரம்பாக்கம் ஏரி இருப்பதால், அப்பகுதியில் ஊற்றுபோல் தண்ணீர் வருகிறது. எனவே, இப்பகுதியில் முறையான வடிகால் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  இதுபற்றி மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘‘நசரத்பேட்டை பகுதியில் மழை ஓய்ந்து 5 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை வெள்ள நீர் வடியாமல், வீடுகளை சூழ்ந்துள்ளது. இந்த சூழலில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், எங்களது குழந்தைகளை படகில் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு செல்லும் போது யாரேனும் படகில் இருந்து தவறி விழுந்தால், அவர்களது புத்தகங்கள் நாசமாகும் நிலை உள்ளது. மாணவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே, இந்த பகுதியில் ராட்சத மோட்டர் அமைத்து, மழைநீரை விரைந்து வெளியேற்ற வேண்டும். இப்பகுதிக்கு முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,’’ என்றனர்.

* உடனடி நடவடிக்கை

மாணவர்கள் படகில் பள்ளிக்கு சென்ற தகவலறிந்த அமைச்சர் மூர்த்தி, நேற்று அதிகாரிகளுடன் யமுனா நகரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிக திறன் கொண்ட 5க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்களை வைத்து, அங்கு தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அதன்படி, மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2 நாட்களில் அந்த பகுதியில் மழைநீர் முழுவதும் அகற்றப்படும், என ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா பொன்முருகன் தெரிவித்தார்.

The post நசரத்பேட்டையில் வடியாத மழை வெள்ளம் படகு மூலம் பள்ளி சென்ற மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nasaratpet ,Chennai ,Mikjam ,Tiruvallur ,Kanchipuram Chengalpattu ,
× RELATED நசரத்பேட்டையில் வீட்டை வாடகைக்கு...