×

பொதுமக்களிடம் ரூ.150 கோடி மோசடி ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளரை விசாரிக்க 7 நாள் போலீஸ் காவல்

மதுரை: ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கும்பகோணம், நாகர்கோவில் மற்றும் கோவை உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வந்த ப்ரணவ் ஜூவல்லரியில் பல்வேறு சேமிப்பி திட்டங்கள் அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் ரூ.150 கோடி மோசடி நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பொருளாதா குற்றப்பிரிவினர் ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களான சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ், இவரது மனைவி கார்த்திகா மதன் ஆகியோரது, முன்ஜாமீன் மனு கடந்த வாரம் ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. முன்னதாக மதன் செல்வராஜ், மதுரையிலுள்ள பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) சரணடைந்தார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் இந்த நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி கே.ஆர்.ஜோதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் இஸ்மாயில் ஆஜராகி, ‘‘முக்கிய குற்றவாளியான மனுதாரரின் மனைவி இன்னும் தலைமறைவாக உள்ளார். இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழுமையான விபரம் தெரியவரும். ரூ.150 கோடி வரை மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, மனுதாரரை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார். மனுதாரர் தரப்பில், ‘‘10 நாள் காவல் தேவையில்லை. 2 நாள் மட்டும் அனுமதித்தால் போதும்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து, வரும் 18ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

The post பொதுமக்களிடம் ரூ.150 கோடி மோசடி ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளரை விசாரிக்க 7 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Pranav Jewelery ,Madurai ,Tamil Nadu, Chennai, ,Trichy ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!