×

மக்களுக்கு பேரழிவை உண்டாக்குகிறதா சிபிசிஎல் தொழிற்சாலை: ஆபத்தான பகுதியாக மாறுகிறதா வடசென்னை? ஒரு வாரமாக தேங்கி நிற்கும் எண்ணெய் கழிவு; சுகாதார கேடால் நோய்களுக்கு ஆளாகும் மக்கள்

சென்னை: வடசென்னையில் முக்கிய தொழிற்சாலைகள் இயங்கக்கூடிய இடமாக மணலி, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அதில், அனல் மின் நிலையம், 10 மில்லியன் டன் உற்பத்தி திறன்கொண்ட பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இங்கு 25க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கிழக்கிந்திய கம்பெனிக்கு முன்பு இருந்தே இயங்கி வருகின்றன. ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சென்னை உரத் தொழிற்சாலை ஆகிய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

1965ம் ஆண்டு எம்ஆர்எல் என்ற பெயரில் வடசென்னையில் தொடங்கப்பட்டது. இதன் பின்னர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முன்னணி குழு நிறுவனத்தில் ஒன்றான சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) என்ற பெயரில் தற்போது செயல்படுகிறது. தென் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கிய மையமாக சிபிசிஎல் நிறுவனம் உள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் நாகை என 2 இடங்களிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 11.5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.

இங்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல், சமையலுக்கு தேவையான எரிவாயு ஆகியவை பிரித்தெடுக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி இதன் கழிவுகளான தார் மற்றும் நிலக்கரிக்கு சமமான மூலப்பொருட்கள் ஆலைகளில் இருந்து ரயில்கள் மூலமாக பிற தேவைகளுக்கு அனுப்பப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு வாயுக்களால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றன. சமீபத்தில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் போது அதிகளவில் காற்று மாசு ஏற்பட்டது கண்டறியப்பட்டு பெட்ரோலியம் சுத்திகரிப்பை 70 சதவீதமாக குறைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவுகளை மீறி தொடர்ந்து தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதும், காற்று மாசுப்பாட்டை உருவாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில்தான், கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெருமழை கொட்டி புரட்டிப் போட்டது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. குறிப்பாக, வடசென்னை பகுதியும் தண்ணீரில் தத்தளித்தது. அன்றைய தினம் புயல் கரையை கடக்கும் நேரத்தை தொடங்கியதும் சிபிசிஎல் நிறுவனம் ஏற்கனவே கச்சா எண்ணெய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை தவிர்த்து மீதமிருந்த கழிவுகளை சேமிப்பு கிடங்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு வெளியேற்றி உள்ளது. இந்த கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கலந்து கடல் வழியாக சென்று விடும் என்று சிபிசிஎல் நிறுவனம் எண்ணி உள்ளது. ஆனால் நடந்தது வேறுவிதமாக இருந்தன. புயல் கரையை கடந்த பின்னர் 12 மணிக்கு மேலாக மழை பொழிவு குறைவாக இருந்தது.

இதன் காரணமாக சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட கழிவுகள் கடல் அலைகளின் உயரம் அதிகமாக இருந்த காரணத்தால் கடலில் கலக்காமல் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் கலந்தது.
மழைநீரை அகற்றும் பணியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில் எண்ணூர் பகுதிகளில் உள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம் மணலி, எர்ணாவூர், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஎல் நிறுவனத்தால் திறந்து விடப்பட்ட கழிவுகளால் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பாதிப்புகளை உடல் ரீதியாக சந்தித்து வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். தற்போது, இந்த விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. அதன்படி தமிழக அரசு தரப்பில் மாசுகட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து முழு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மீனவர் பார்த்த சாரதி கூறியதாவது: பெருமழை மற்றும் புயலால் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் சிபிசிஎல் ஆலையிலிருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகளால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியவில்லை, படகுகளும் சேதமாகியுள்ளது. ஒரு படகு 7 வருடம் வரை உபயோகிக்க முடியும் நிலையில், இவ்வாறான சேதம் ஏற்படும்போது 3 வருடங்கள் மட்டுமே பயன்படும். மேலும் வெள்ளம் ஏற்படும்போது பக்கிங்காம் கால்வாய் வழியாக பல உயிரினங்கள் மிதந்து வரும். ஆனால் இந்த முறை அனைத்து உயிரினங்களும் எண்ணெய் கலந்து இறந்த நிலையில் காணப்பட்டன. முகத்துவாரத்தில் மீன்கள் மற்றும் பறவைகள் செத்து
மிதக்கிறது.

மணலி ஜோதி நகரை சேர்ந்த வள்ளி கூறியதாவது: வடசென்னை காற்றின் தரம் மோசமாக உள்ளதால் மக்கள் வாழவே தகுதியற்ற பகுதி என தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதிர்ச்சியடையும் வகையில் வெள்ள பாதிப்பு ஏற்படும்போது நிறுவனங்களிலிருந்து இவ்வாறு வெளியேறும் எண்ணெய் கழிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருட்கள் நாசமானது மட்டுமின்றி 2 நாட்களாக வயிற்றுப் போக்கு, கண் எரிச்சல், தோல் நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கால்வாயில் திறந்து விட்டு நீர்வாழ் உயிரினங்களை கொன்றதுபோல் தற்போது குடியிருப்புகளில் திறந்து விட்டுள்ளனர்.

ஏற்கனவே வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணூர் பகுதி மக்களின் வீட்டிற்குள் தற்போது தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் புகுந்து இருப்பது மேலும் பாதிப்பை அதிகரித்துள்ளது. இது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறியிருக்கும் அபாயகரமான நச்சு எண்ணெய் என்பதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அரசு விரைந்து அப்புறப்படுத்த வேண்டும். விதிமீறல்களில் ஈடுபட்ட தொழிற்சாலைகளை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் தான் காரணம் என்ற அடிப்படையில் அவர்களின் செலவில், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக சர்வதேச தரத்தில் சுத்தம் செய்து தர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து அரசு உடனடியாக பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* உயிரினங்களுக்கு பாதிப்பு
விலங்குகளின் ரோமம், பறவைகளின் இறகுகள் ஆகியவற்றில் எண்ணெய் ஒட்டிக்கொள்வதால் அவற்றின் வெப்பநிலை குறைந்து, அவை இறந்துபோகும் நிலை ஏற்படுகிறது. கடல் வாழ் விலங்குகள் எண்ணெயை உட்கொள்வதால் அவற்றின் உடம்பில் நச்சுத்தன்மை உருவாகும். எண்ணெயால் பாதிக்கப்பட்ட பறவைகள், ஊர்ந்து செல்லும் விலங்குகள் ஆகியவை இடும் முட்டைகளில் ஓடுகள் மெலிதாகும்.

* ஹெலிகாப்டர் மூலம் தூவப்படும் ஓஎஸ்டி
கடலோர காவல்படை மூலம் கடந்த 2 நாட்களாக எண்ணெய் கழிவுகளை அகற்ற ஓஎஸ்டி எனப்படும் வேதிப்பொருட் ஹெலிகாப்டர் மூலம் தூவப்படுகிறது. இந்த வேதிப்பொருள் எண்ணெய் கழிவில் கலந்த உடன் எண்ணெய் மற்றும் நீரை தனியாக பிரிந்தெடுக்கும். இத்தன்மை கொண்டதாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

* அதிகளவில் சுத்திகரிக்கும் திறன் கொண்ட மணலி சிபிசிஎல்
தென் இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கிய மையமாக மணலியில் உள்ள சிபிசிஎல் தொழிற்சாலை விளங்குகிறது. இங்கு மட்டும் ஆண்டுக்கு 10.5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* எண்ணெய் கழிவுகளை அகற்ற பல லட்சம் செலவு
மணலி சிபிசிஎல் தொழிற்சாலையிலிருந்து பேரல்கள் மூலமாக எண்ணெய் கழிவுகளை ஏற்றி செல்ல ஒரு லாரிக்கு 3 லட்சம் என தினசரி பல லட்ச கணக்கில் செலவிட்டு கிடங்கிலிருந்து அகற்றப்படுகிறது. இந்த செலவுகளை தவிர்க்க ஒருசிலரின் சுயநலத்தால் கடலில் கச்சா எண்ணெய் திறந்து விடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

* 7 மாதங்களுக்கு முன்பே குழு அமைப்பு
வடகிழக்கு பருமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துறை ரீதியாக எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நீர்வளம், மின்சாரம், பேரிடர் மேலாண்மை, போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் பல மாதங்களுக்கு முன்பாகவே அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து பருவமழையை எதிர்க்கொள்ள தயாராக இருந்தனர். அந்த வகையில் பேரிடர் மேலாண்மை கீழ் தலைமை செயலாளர் தலைமையில் 20 உறுப்பினர்களை கொண்ட குழு கடந்த மே 19ம் தேதி உருவாக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிபிசிஎல் தொழிற்சாலையிலிருந்து வெளியான கழிவுகள் குறித்த முழு அறிக்கையை சமர்பிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

* சிபிசிஎல் தயாரிப்புகள் என்ன?
சிபிசிஎல் நிறுவன தொழிற்சாலையில் கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல், எல்பிஜி எரிவாயு, மோட்டார் ஸ்பிரிட், சுப்பீரியர் மண்ணெண்ணெய், ஏவியேஷன் டர்பைன் எரிபொருள், அதிவேக டீசல், நாப்தா, பிட்யூமன், லூப் பேஸ் ஸ்டாக்ஸ், பாரஃபின் மெழுகு, எரிபொருள் எண்ணெய், ஹெக்சேன் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஃபீட் ஸ்டாக்குகள் உள்ளிட்டவைகள் மணலி தொழிற்சாலையில் நேரடியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

* கடலோர காவல் படையால் அம்பலம்
வடசென்னை பகுதியில் சிபிசிஎல் வெளியேற்றிய கழிவுகள் குறித்து கடலோர காவல்படையினர் கடந்த இரு நாட்களாக ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து விரிவான அறிக்கையை தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவுக்கு அனுப்பியுள்ளனர். அதில் ஒன்றிய அரசின் நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்துதான் வெளியேறியது என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.

* கருவில் உள்ள சிசுக்களுக்கு ஏற்படும் ஆபத்து
பொதுவாக சென்னையில் உள்ள மீன்களில் அதிகப்படியான மெக்னீசியம், கால்சியம் போன்ற புரத சத்துகள் குறைவாக உள்ளதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகின்றன. பெண்களுக்கான மகப்பேறு காலங்களில் தாய் பால் சுரப்பை அதிகரிக்க பால் சுறா, திருக்கை மற்றும் காரல் மீன் என இந்த மூன்று மீன்களும் கொடுக்கப்படுவது வழக்கம். அடிக்கடி எண்ணூர், மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மீன்கள் அதை உண்கின்றன. இதனால் அந்த மீன்களை சாப்பிடும் கர்ப்பிணிகளுக்கும், கருவில் உள்ள சிசுவிற்கும் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதுமட்டுமின்றி, குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கும் சூழலும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

* டீல் பேசும் சிபிசிஎல் நிறுவனம்
சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து திட்டமிட்டு திறந்துவிடப்பட்ட எண்ணெய் கழிவுகளால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார சீர்கேட்டால் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், அம்மக்களிடம் நிறுவனத்தின் சார்பில் சமரசம் பேச திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்ற சிபிசிஎல் நிறுவனம் மூலம் வேலை ஆட்கள், எண்ணெய் அகற்றும் மோட்டார்கள், டிராக்டர், டிப்பர் வண்டிகள், ஜே.சி.பி வாகனம் உள்ளிட்டவைகளை கொண்டு எண்ணெய்களை அகற்றி தருவதாக உறுதியளித்துள்ள தகவலும் வெளியாகி உள்ளன.

* அரசு விரைந்து நடவடிக்கை
எண்ணெய் கழிவு புகார்கள் வந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேரில் சென்று ஆய்வு செய்தோம். இது குறித்து ஆய்வு நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

* கழிவு எண்ணெய்யால் மனித உடலில் ஏற்படும் பாதிப்பு
எண்ணெய் படிந்த பகுதிகளில் வெயில் பட்டவுடன் கிளம்பிய நாற்றம் பலருக்கும் தலைசுற்றல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியது. குறிப்பாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சைனஸ் மற்றும் மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் அந்த எண்ணெய் கலந்த நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்ததால் அங்கு உள்ள மக்களுக்கு கெரடோலிசிஸ், செல்டிஸ் போன்ற தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தவிர கண் எரிச்சலும் ஏற்படகூடும். ேமலும் சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்துவதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவையும் ஏற்படகூடும். பல்வேறு சுகாதார சீர்கேடு பிரச்சனைகள் இப்பகுதியில் உள்ளதால் சுகாதாரத்துறை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post மக்களுக்கு பேரழிவை உண்டாக்குகிறதா சிபிசிஎல் தொழிற்சாலை: ஆபத்தான பகுதியாக மாறுகிறதா வடசென்னை? ஒரு வாரமாக தேங்கி நிற்கும் எண்ணெய் கழிவு; சுகாதார கேடால் நோய்களுக்கு ஆளாகும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : CBCL ,North Chennai ,CHENNAI ,Manali ,Ennore ,Tiruvotiyur ,Dinakaran ,
× RELATED வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய...