×

டசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை ஒரே மாதத்தில் 315 பேர் கைது, 170 வங்கி கணக்கு முடக்கம்: பொதுமக்கள், ஆசிரியர்கள் வரவேற்பு

சிறப்பு செய்தி

வடசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஒரே மாதத்தில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 170 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. போலீசார் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் குற்ற செயல்களை தடுப்பது, குற்ற செயல்கள் நிகழாமல் பாதுகாப்பது போலீசாருக்கு எப்போதுமே சவாலான ஒரு விஷயம். பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் போலீசார் எப்போதும் குற்ற செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். குறிப்பாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பக்கத்து மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் சர்வ சாதாரணமாக கிடைப்பதால், இவற்றை வாங்கி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து பலரும் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தனர்.

அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் குட்கா விற்பனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அமைச்சர்கள் முதல் போலீஸ் உயர் அதிகாரிகள் வரை இதில் தொடர்புள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சென்னையில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனைக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பொறுப்பேற்ற பிறகு, வடசென்னையில் குட்கா விற்பனை குறித்து ரகசிய ஆய்வு நடத்தி, எந்தெந்த காவல் நிலைய பகுதிகளில் அதிக அளவில் விற்பனை நடைபெறுகிறது, எந்தெந்த போலீசார் இதற்கு உடந்தையாக உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை சேகரித்தார். அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டார்.

அதில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் காவலர்கள் கண்டிப்பாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். அதன்பேரில், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு காவல் மாவட்டம், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம், பூக்கடை காவல் மாவட்டம், கொளத்தூர் காவல் மாவட்டம், அண்ணாநகர் காவல் மாவட்டம், கோயம்பேடு காவல் மாவட்டம் ஆகிய 6 காவல் மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த சுமார் 800 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனைக்கு ஆதரவாக செயல்பட்ட சில காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதில் சில உதவி கமிஷனர்களும் அடங்குவர். இதேபோன்று பல்வேறு காவல் நிலையங்களில் குட்கா விற்பனைக்கு சாதகமாக செயல்பட்டதாகக் கூறி 200க்கும் மேற்பட்ட போலீசார் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். இதனால் அதிர்ந்து போன போலீசார் வடசென்னை பகுதியில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர்.

இதன் விளைவாக தற்போது வடசென்னை பகுதியில் பெருமளவு குட்கா மற்றும் கஞ்சா விற்பனை குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதாவது நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை வடசென்னை பகுதியில் 180 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3,000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 120 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கில் இருந்த சுமார் 28 லட்ச ரூபாய் பணம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று கஞ்சாவை பொறுத்தவரை கடந்த மாதம் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 50 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. குட்காவுக்கு எதிராக மட்டும் பூக்கடை பகுதியில் ஜெகநாதன் மற்றும் கோயம்பேடு பகுதியில் சுரேஷ், மூர்த்தி ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தொடர்ந்து குட்கா மற்றும் கஞ்சா விற்பவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வட சென்னையில் பணிபுரியும் பெயர் கூற விரும்பாத இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், வழக்கமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்தால் அவர்களை பிடித்து சாதாரண வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து வந்தோம். ஆனால் தற்போது ஒரு பாக்கெட் குட்கா வைத்திருந்தால் கூட அவர்களை சிறையில் அடைத்து வருகிறோம். இதனால் பெரும்பாலான கடைகளில் குட்கா விற்பதை நிறுத்தி விட்டார்கள். இதேபோன்று கஞ்சாவுக்கு எதிராகவும் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதனால் வடசென்னை பகுதியில் பெருமளவு கஞ்சா விற்பனை குறைந்துள்ளது. பலர் இந்த வியாபாரமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் ஒரு சிலர் மட்டுமே பணம் பார்க்கும் ஆசையில் பெங்களூரு மற்றும் ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்களைக் கொண்டு வந்து அதனை பல்வேறு இடங்களில் கைமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். அவர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இனிவரும் காலங்களிலும் குட்கா மற்றும் கஞ்சாவுக்கு எதிராக போலீசார் தங்களது அதிரடியை தொடர்ந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதை பயன்படுத்துபவர்களே அதனை மறந்து விடுவார்கள். ஒரு காலத்தில் எப்படி சாராயம் விற்கப்பட்டு அது தற்போது கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை வந்ததும் குடிமக்கள் அதனை மாற்றிக் கொண்டார்களோ, அதுபோல குட்காவை பயன்படுத்துபவர்களும் கண்டிப்பாக தங்களது செயலை மாற்றிக் கொள்வார்கள். எனவே போலீஸ் உயரதிகாரிகள் அறிவுறுத்தலின் படி தொடர்ந்து குட்கா மற்றும் கஞ்சாவுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

* வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

பொதுவாக வியாபாரிகள் எந்த ஒரு பொருள் மீதும் கூடுதலாக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வைத்து விற்பனை செய்வார்கள். குட்கா போன்ற பொருட்களில் ஒரு பாக்கெட் விற்றால் பத்து ரூபாய் அல்லது இருபது ரூபாய் லாபம் கிடைக்கிறது என்ற காரணத்தினால் பங்க் கடை மற்றும் பெட்டிக்கடைகளில் அதனை ஆரம்பத்தில் வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். போலீசாரும் சிறிய அபராதம் மட்டுமே விதித்து வந்ததால் அதனை ஒரு குற்றமாக அவர்கள் கருதவில்லை. ஆனால் தற்போது போலீசார் குட்கா பொருட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால் ஆரம்பத்தில் வியாபாரிகள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பு ஒவ்வொரு துணை கமிஷனர் தலைமையிலும் வியாபாரிகளை அழைத்து குட்கா விற்பனை செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது வியாபாரிகளும் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் கடைகளில் குட்கா விற்பனை என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

The post டசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை ஒரே மாதத்தில் 315 பேர் கைது, 170 வங்கி கணக்கு முடக்கம்: பொதுமக்கள், ஆசிரியர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : gutka ,Dashennai ,Special News Police ,Ganja ,North Chennai ,Dasennai ,
× RELATED மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது..!!