×

அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு: விஜய் ஹசாரே கோப்பை

ராஜ்கோட்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் காலிறுதியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ராஜ்கோட்டில் நேற்று நடந்த 4வது காலிறுதியில் மும்பை – தமிழ்நாடு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரகானே முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். சக்சேனா டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, ஜெய் பிஸ்டா – ஹர்திக் தமோர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. தமோர் 37 ரன்னில் வெளியேற, ரகானே 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பிஸ்டா 37 ரன் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் வருண் வசம் பிடிபட்டார்.

பிரசாத் பவார் – ஷிவம் துபே இணைந்து 5வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தனர். துபே 45 ரன், பவார் 59 ரன்னில் பெவிலியன் திரும்ப, தணுஷ்கோட்டியன் 1 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப்பிடித்த ஷாம்ஸ் முலானி 27 ரன் எடுக்க, தவால் குல்கர்னி 2, மோகித் அவஸ்தி 17 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி 48.3 ஓவரில் 227 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து 50 ஓவரில் 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. என்.ஜெகதீசன் 27 ரன்னில் ஆட்டமிழக்க பாபா அபராஜித் – பாபா இந்திரஜித் இணை 2வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. அபராஜித் 45 ரன், நிதிஷ் ராஜகோபால் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அதன் பிறகு இந்திரஜித் – விஜய் சங்கர் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்க்க, தமிழ்நாடு அணி 43.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்து அபாரமாக வென்றது. இந்திரஜித் 103 ரன் (98 பந்து, 11 பவுண்டரி), விஜய் ஷங்கர் 51 ரன்னுடன் (58 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அப்போது தமிழ்நாடு 3 விக்கெட் இழப்புக்கு 229ம் ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. பாபா இந்தரஜித் 103, விஜய் சங்கர் 51ரன்னுடன் களத்தில் இருந்தனர். மும்பை தரப்பில் மோஹித் அவஸ்தி, ராய்ஸ்டன் தாஸ், தனுஷ் கோடியன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். விஜய் ஹசாரே தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு 12வது முறையாக காலிறுதியில் விளையாடி 9வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

* முதல் காலிறுதியில் பெங்கால் அணியுடன் மோதிய அரியானா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பெங்கால் 50 ஓவரில் 225 ரன் ஆல் அவுட் (ஷாபாஸ் அகமது 100, போரெல் 24, கேப்டன் கராமி, பிரமானிக் தலா 21). அரியானா பந்துவீச்சில் சாஹல் 4 விக்கெட் கைப்பற்றினார். அரியானா 45.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன் (அங்கித் குமார் 102, கேப்டன் மெனரியா 39, நிஷாந்த் 27, ராகுல் திவாதியா 21*).

* 2வது காலிறுதியில் ராஜஸ்தான் 200 ரன் வித்தியாசத்தில் கேரளாவை துவம்சம் செய்தது. ராஜஸ்தான் 50 ஓவரில் 267/8 (லோம்ரர் 122*, குணால் சிங் 66). கேரளா 21 ஓவரில் 67 ரன் மட்டுமே எடுத்து சுருண்டது (சச்சின் பேபி 28, கேப்டன் ரோகன் 11).

* ராஜ்கோட்டில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் அரியானா – தமிழ்நாடு அணிகளும், நாளை மறுநாள் நடக்கும் 2வது அரையிறுதியில் ராஜஸ்தான் – கர்நாடாகா மோத உள்ளன. பைனல் டிச.16ம் தேதி நடைபெறும்.

* 3வது காலிறுதியில் கர்நாடகா 7 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தியது. விதர்பா 44.5 ஓவரில் 173 ரன் ஆல் அவுட் (வாத்கர் 32, யஷ் தாகூர் 38, ஷுபம் துபே 41, நல்கண்டே 20). கர்நாடகா 40.3 ஓவரில் 177/3 (ரவிகுமார் சமர்த் 72*, கேப்டன் மயாங்க் அகர்வால் 51, நிகின் ஜோஸ் 31).

The post அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு: விஜய் ஹசாரே கோப்பை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vijay ,Rajkot ,Day Cricket Series ,Mumbai ,Hazare ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...